கொழும்பு, மே 31: ரயில்பஸ் சேவை தொடக்க விழா கிழக்கு மாகாணத்தின் கலோயா ரயில் நிலையத்தில் மே 26-ம் தேதி நடைபெற்றது. இதில் அந்த மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு ரயில்பஸ் சேவையை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் இந்தியாவின் சார்பில் அந்நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரி அசோக் காந்தா கலந்து கொண்டார்.
இலங்கையின் கிழக்கு மாகாண மக்களின் போக்குவரத்துக்காக 5 ரயில்பஸ்களை அளிப்பதாக இந்தியா உறுதி அளித்திருந்தது. அதன்படி 4 ரயில்பஸ்கள் கடந்த ஆண்டே அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
திரிகோணமலை-மட்டக்களப்பு இடையே இந்த ரயில்பஸ்கள் இயக்கப்பட்டுவருகின்றன. முன்னதாக கிழக்கு மாகாண மக்கள் போக்குவரத்துக்கு கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்த ரயில்சேவை அவர்களின் போக்குவரத்து கஷ்டத்தை நீக்கியுள்ளது. அவர்களால் நினைத்த இடத்துக்கு, நினைத்த நேரத்தில் செல்ல முடிகிறது.
இந்நிலையில் இப்போது அளிக்கப்பட்டுள்ள 5-வது ரயில்பஸ் மூலம் கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் பயனடைய உள்ளதாக அந்த மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ரயில்வே துறையுடன் இணைந்து இந்த ரயில்பஸ் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாண மக்கள் பெரிதும் பயனடையவுள்ளனர். இலங்கையின் அமைதி, வளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தியா அந்நாட்டுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. இரு நாடுகளின் உறவும் வலுப்பட வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது'' என்று இந்திய தூதரக அதிகாரி அசோக் காந்தா கூறினார்.
0 comments :
Post a Comment