வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்திய தொழிலாளர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, பல்வேறு தரப்பினரிடையே அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
கிராமப்புறங்களில் விவசாய தொழில் நசிந்து வருவதால், நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு, பெரும்பாலானோர் விரும்புகின்றனர். முறையான விதிமுறைகளை பின்பற்றி, சரியான நபரின் வழிகாட்டுதலில், வெளிநாட்டிற்குச் சென்று, குறிப்பிட்ட சில ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தால், தங்கள் ஊரில் சொந்த வீடு, பிள்ளைகளின் படிப்பு மற்றும் ஏதேனும் தொழில் செய்வதற்கான முதலீடு போன்றவற்றிற்குத் தேவையான பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.வளைகுடா நாடுகளில், கட்டட வேலை, வீட்டுவேலை உள்ளிட்டவற்றுக்கு தொழிலாளர்களாக செல்ல, ஆந்திராவில் கடும் போட்டி நிலவுகிறது.
ஆந்திர மாநிலத்தில், கடந்தாண்டு, வெளிநாட்டில் கூலி வேலைக்குச் செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 4 லட்சத்து 50 ஆயிரம். இந்திய வரலாற்றில், இது மிக அதிகபட்ச எண்ணிக்கையாக கூறப்படுகிறது. மேலும், இது இந்த ஆண்டில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து, வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜன்டுகள், முறைப்படி பாஸ்போர்ட், விசா பெற்று, வேலைக்கான நியமன கடிதம் மற்றும் ஒப்பந்தக் கடிதம், வேலை விவரம், ஊதியம் உள்ளிட்ட விவரங்களை, கொடுத்து அனுப்ப வேண்டும்.
ஆனால், இந்த அனைத்து விதிமுறை மற்றும் நடைமுறைகளை, ஏஜன்டுகள் பின்பற்றுவதில்லை. விளைவாக, வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் இந்தியர்கள், தனிப்பட்ட பிரச்னைகள், வேலையிடத்தில் நெருக்கடி, நிதி, வேலைப்பளு, குடும்பச்சூழல் உள்ளிட்டவற்றின் காரணமாக, தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. ஜூலை 2008 முதல் நவம்பர் 2010 ஆண்டு வரையிலான கால கட்டத்தில், ஆந்திராவிலிருந்து வெளிநாட்டு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களில் 270 பேர், தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு, பெரும்பாலும் பணியிடங்களில் ஏற்படும் நெருக்கடிகளே காரணமாக அமைகிறது.
ஆந்திர மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமுனா என்பவரின் கணவர், 2007ம் ஆண்டு துபாய்க்கு கட்டட வேலைக்குச் சென்றார். இதற்காக, இவர் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினார். தனது செலவுகள் போக, வீட்டிற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை அனுப்பலாம் என, ஏஜன்டுகள் சொன்னதை நம்பிச் சென்றார். ஆனால், 18 மாதம் வரை அங்கு வேலை செய்த அவரால், வெறும் 30 ஆயிரம் மட்டுமே அனுப்பினார். ஊரில், அவர் வாங்கிய கடன் தொகைக்கு, வட்டி அதிகமாகிக் கொண்டே வந்தது. இதனால், ஏற்பட்ட மன உளைச்சலால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
வாழ்க்கையை வளமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிலிருந்து, ஏராளமான இந்தியர்கள் வளைகுடா நாடுகளுக்குச் கட்டட தொழில், வீட்டுவேலை உள்ளிட்டவற்றுக்குச் செல்கின்றனர். ஆனால், தவறான ஏஜன்டுகளிடம் இவர்கள் சிக்கிக் கொள்வதால், அவர்களும், அவர்களின் குடும்பமும் சீரழிந்து விடுகிறது. இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்ல, 65 ஆயிரம் ரூபாய் முதல் 1.6 லட்சம் வரை செலவாகிறது. இது தவிர, ஏஜன்ட் கமிஷன் தனி. வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்காக, ஊரில் உள்ள நில புலன்களை விற்றும், லட்சக்கணக்கில் கடன் வாங்கியும், வெளிநாடு செல்லும் பெரும்பாலான தொழிலாளர்கள், தங்கள் வேலை செய்யும் நிறுவனம், சம்பளம் உள்ளிட்ட எதைப் பற்றியுமே தெரிந்து கொள்ளாமல் செல்கின்றனர். அங்கு போன பின்னரே, என்ன வேலை செய்யப் போகிறோம் என்றே பலருக்கு தெரியவருகிறது.
அங்கு போனதும், முதல்வேலையாக, அவர்களது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் பிடுங்கி வைத்துக் கொள்கின்றனர்.வேலை தொடர்பான ஒப்பந்தங்களும், ஆங்கிலம் அல்லது அரபு மொழிகளில் இருப்பதால், எழுதப் படிக்கத் தெரியாத தொழிலாளர்களுக்கு, அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியாமல், கையெழுத்துப் போடுகின்றனர். ஏஜன்டுகள் இங்கு சொன்ன சம்பளத்தை விட, பலமடங்கு குறைவாகவே இருக்கிறது. தினசரி 12 மணி நேரம், வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் கூட, "ஓவர் டைம்' என்ற பெயரில் வேலை செய்தாக வேண்டும். தங்குமிடம் மிக மோசமாக இருக்கும்.
நான்கு பேர் தங்கக் கூடிய சிறிய அறையில் 10 க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டிருப்பர். சரியான உணவு வழங்கப்படுவதில்லை. பெரும்பாலும், ரொட்டியும், தாலும் வழங்கப்படும். சில நேரங்களில் பிரட் தரப்படும். சைவ உணவு சாப்பிடுபவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சரியான உணவு, ஓய்வு இல்லாததாலும், அதைவிட முக்கியமாக, தங்கள் எதிர்பார்த்து வந்ததைவிட, மிகவும் குறைவாக சம்பளம் தரப்படுவதாலும் தொழிலாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவர். மேலும், சில இடங்களில், ஒப்பந்தக்காலம் முடிந்ததும் அவர்களை தங்களது நாட்டிற்குத் திரும்ப சில நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அவர்களிடம் இருப்பதால், அவர்களால் வெளியே எங்கும் செல்ல முடியாது. கொத்தடிமைகளைப் போல் நாட்களை நகர்த்தும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.
இதனால், விரக்தியின் உச்சத்திற்குச் சென்று தற்கொலை முடிவை எடுக்கின்றனர். இந்த பிரச்னை அவர்களோடு முடிவதில்லை. தற்கொலை செய்துக்கொண்ட நபரின் உடலை, இந்தியாவிற்கு கொண்டுவர அவர்களின் குடும்பத்தினர் பெரும் சிரமப்பட வேண்டும். பொருளாதார வசதிகள் தவிர, சட்ட உதவிகளும் தேவை. சிலர், வெளிநாடுகளில் இறந்த தங்களது உறவினரின் உடலை கொண்டுவர, பல மாதங்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.தங்கள் குடும்பத்தை வளமாக வாழ வைக்க வேண்டும் என்ற கனவோடு வெளிநாடு சென்று, அங்கு வேறு விதமான முடிவை தேடிக்கொண்ட நபரின் குடும்பம், மேலும் வறுமைக்குத் தள்ளப்படுகிறது.
#எதிர்கால வாழ்வுக்கு பணம், இன்றியமையாததுதான் அவர்களின் கஷ்டம் (கணவன், பிள்ளைகள்) இவர்களுக்கு எப்படி புரியபோகிறது.
0 comments :
Post a Comment