தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க., முல்லைவேந்தன் மற்றும் இன்பசேகரன் ஆகியோர் இரு கோஷ்டியாகச் செயல்படுகின்றனர். இருவரும் தெற்கு, வடக்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ளனர். பென்னாகரம் தொகுதியில் இன்பசேகரனும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் முல்லைவேந்தனும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இருவரும் வெற்றி பெற்று விடுவோம் என தலைமையில் உறுதி அளித்த பின், சீட் பெற்று வந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை பா.ம.க., கேட்டு வந்த நிலையில், அதை விடாப்பிடியாக முல்லைவேந்தன் பெற்று வந்தார். இரு தொகுதியிலும் வெற்றி இலக்கோடு தேர்தல் பணிகளை துவங்கினாலும், எதிர் அணியின் தீவிர பிரசாரம், தி.மு.க.,வில் நிலவிய கோஷ்டி பூசல், தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் முல்லைவேந்தனுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகத்தின் தீவிர ஆதரவாளர், தி.மு.க., இலக்கிய அணி முன்னாள் தலைவர், ஆசிரியர் வேலு சுயேச்சையாக களம் இறங்கி, 18 ஆயிரத்து 710 ஓட்டுகளை பிரித்தார். இந்த ஓட்டுகள், தி.மு.க.,வின் வெற்றியைப் பறித்தது.
பென்னாகரம் தொகுதியில் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன், சுவர் விளம்பரம் அளிப்பது தொடர்பாக பருவதனஅள்ளியில் நடந்த மோதலில் தி.மு.க.,வினர் தாக்கியதில், தே.மு.தி.க.,வை சேர்ந்த கிளை செயலர் கொலை செய்யப்பட்டார். இதனால், இந்த தொகுதியின் தேர்தல் வெற்றியும் கடைசி நேரத்தில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமாக மாறியது.
தி.மு.க., இரு தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில், இன்பசேகரன் ஆதரவாளர்கள், முல்லைவேந்தன் தோல்வி அடைந்ததையும், முல்லைவேந்தன் ஆதரவாளர்கள், இன்பசேகரன் தோல்வி அடைந்திருப்பதையும் கண்டு, சோகத்திலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருவரில் ஒருவர் வெற்றி பெற்று இருந்தால், தி.மு.க., தலைமையில் நம்பிக்கை பெற்று ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளராக மாறும் வாய்ப்பு இருந்ததால், ஒருவர் தோல்வியை கண்டு மற்றவர் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment