தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, படிவம் 20ல் வாக்குகள் பதிவு செய்யப்படும் தகவலை கட்சி முகவர்கள் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது, சிவங்கங்கை தொகுதியில் வாக்குகளின் எண்ணிக்கை, படிவம் 20ல் பதிவு செய்யும்போது முறைகேடுகள் நடந்துள்ளன.
அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பெற்ற வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரத்துக்கும், ப. சிதம்பரம் பெற்ற வாக்குகள் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பெயரிலும் படிவம் 20ல் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் மற்றும் முகவர்களால் எழுத்தால் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை தகவல்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களால் படிவம் 20ல் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு, சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி பகுதியில் 31வது பிரிவில் வாக்கு எண்ணிக்கை மாற்றி பதிவு செய்யப்பட்ட விவரத்தை இத்துடன் இணைத்துள்ளேன். ஆளுங்கட்சியான திமுக அரசுக்கு ஆதரவாக இவ்வாறு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் பதிவு செய்யும் வாக்கு எண்ணிக்கையும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பதிவு செய்யும் வாக்கு எண்ணிக்கை விவரங்களும் ஒன்றாக உள்ளதா என்பதை சரிபார்க்க தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு சரிபார்த்த பின்னரே இறுதி தேர்தல் முடிவை வெளியிட வேண்டும்.
0 comments :
Post a Comment