புது தில்லி: பல்வேறு விஷயங்களில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை குஜராத் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:÷விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.
அரசின் பட்ஜெட்டில் 19 இனங்களில் ரூ.1,444 கோடி சேமிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரூ.2,045 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 601 கோடி கூடுதலாகத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அரசின் பட்ஜெட் தொடர்பான செயல்பாடு சரியில்லை என்பதையே காட்டுகிறது.
முறையான விளையாட்டுக் கொள்கை வகுக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் அனைவரும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான விளையாட்டு விடுதிகள் செயல்பாட்டில் இல்லை.
குடிநீர்க் கொள்கையும் சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. சபர்மதி ஆற்று நீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாகக் கண்காணிக்கவில்லை.
நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்களை, தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை.
நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 comments :
இந்த நாதாரியை தெருவிலே உட்டு கல்லால் அடித்து கொள்ளவேண்டிய, sams
Post a Comment