திமுக கூட்டணியில் பா.ம.க.வை மீண்டும் சேர்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்த்தார் என்ற தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அணியில் பா.ம.க. சேருகிறதா இல்லையா என்ற கேள்வி கடந்த சில தினங்களாக பரபரப்பாகப் பேசப்பட்டுவந்தது. கடந்த வாரம் தில்லி சென்ற முதல்வர் கருணாநிதி, திமுக அணியில் பா.ம.க. இருப்பதாகக் கூறினார்.
முதல்வர் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார், கூட்டணி பற்றி விரைவில் கட்சி உயர் நிலைக்குழு கூட்டத்தில் பேசி முடிவு செய்வோம்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். இதையடுத்து, "நாங்களும் இன்னும் முடிவு செய்யவில்லை' என்று கருணாநிதி கூறினார். சென்னை திரும்பிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "திமுக அணியில் பா.ம.க.வைச் சேர்ப்பது பற்றிய கேள்விக்கு இடமில்லை' எனக் கூறிவிட்டார்.
புதன்கிழமை சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், திமுக கூட்டணியில் பாமக இல்லை என்று தாம் கூறவில்லை' என்றும், கூட்டணி குறித்து முதல்வரின் நம்பிக்கை வீண் போகாது' என்றும் கூறினார். கூட்டணியில் பாமக இல்லை என தாம் கூறவில்லை என்றால், பத்திரிகைகளில் செய்தி வெளியான நாளிலேயே அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், இனி அந்தக் கேள்விக்கே இடமில்லை என கருணாநிதி கூறிய பிறகு எதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என திமுக உயர்நிலைத் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்தச் சூழ்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடந்தது.
கூட்டணியில் பா.ம.க.வைச் சேர்ப்பது பற்றிய பேச்சு வந்தபோது, விரோதிகளைக்கூட மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது. 2009 வரையில் நம்முடன் ஆட்சியில் இருந்துவிட்டு திடீரென கூட்டணியைவிட்டு விலகிச் சென்ற பா.ம.க.வை இப்போது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என ஏன் கூறுகிறீர்கள்? என்று தில்லியில் சோனியா காந்தி கேட்டபோது என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை'' என்று கருணாநிதி பேசியதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருணாநிதி தில்லியில் இருந்து சென்னை திரும்பிய போதேகூட இதுபற்றி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க சோனியா எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று அப்போதே கூறினர்.
இதற்கிடையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி தில்லி சென்று காங்கிரஸ் தலைமையைச் சமாதானம் செய்து கூட்டணியில் சேர முயற்சி மேற்கொண்டார் என்று தில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் என்பதற்காக, முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
கடந்த ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல் சமயத்தில், தங்களுக்கு உடனடியாக இடம் தர மறுத்த திமுக தலைமைக்குப் பதிலடி தருவதற்காகவே, ""நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை'' என்று ராமதாஸ் கூறினார் என பா.ம.க.வினர் கூறி வந்தனர்.
ஆனால் இனி அந்தக் கேள்விக்கே இடமில்லை' என்ற கருணாநிதியின் பதிலால் பா.ம.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். திமுகவில் இல்லை என்று தெரிந்துவிட்டால் அதிமுகவில் மரியாதையான அளவுக்கு தொகுதிகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சமே இதற்குக் காரணம் என அரசியல் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
திமுக - காங்கிரஸ் அணியில் பா.ம.க.வைச் சேர்ப்பதில் சோனியாவுக்கு விருப்பம் இல்லை என்பது அதிர்ச்சி தருவதாகக் கருதப்படுகிறது. இருந்தாலும் காங்கிரஸ் தலைமையைச் சமாதானப்படுத்துவதைப் பொருத்தே இந்த அணியில் பா.ம.க. சேருவதற்கான வாய்ப்பு அமையும் என திமுக தலைவர்கள் கூறுகின்றனர்.
0 comments :
Post a Comment