Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 19, 2011

மக்கள்தொகை கணக்கெடுப்பும்., மக்களின் அறியாமையும்?

வணக்கம் சார்! மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துருக்கோம்!'

- ரோட்டில் இருந்து வாசல் கதவை எட்டிப் பார்த்துக் கூவுகிறார் அந்த அரசு ஊழியர்.

"நாளைக்கு சாயந்தரமா வாங்க' என, முகத்தில் அடித்தாற்போல் பதில் வருகிறது. பென்சிலால் அதைக் குறித்துக்கொண்டு, அலுக்காமல் அடுத்த வீட்டு கதவைத் தட்டுகிறார் அந்த ஊழியர்.

இப்படித்தான் இருக்கிறது, மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களின் நிலை. சிலர் காலையில் வரச் சொல்வர்; சிலர் மாலையில்; சிலர் அடுத்த நாள். சிலரிடம் பதிலே கிடையாது. "அவ்வளவு ஏன்? விவரம் சொன்னதும், படாரென்று கதவைச் சாத்தியவர்களும் உண்டு' என, குமுறுகிறார் சென்னையின் புறநகர்ப் பகுதியில் கணக்கெடுக்கும் ஒரு பெண்மணி. மக்களைச் சொல்லியும் குற்றமில்லை. வாரம் முழுவதும் வேலை பார்த்து, வீட்டில் ஓய்ந்து கிடக்கும் நேரத்தில், யாரோ அதிகாரியின் கேள்விகளுக்கு அரை மணி நேரம் பதில் சொல்வதென்றால் கசப்பாகத் தான் இருக்கிறது. இப்படி இரண்டும் இரு துருவத்தில் இருக்கும் என்பதைக் கணித்து தான், இந்தப் பணிக்கு 20 நாட்களை ஒதுக்கியிருக்கிறது உள்துறை அமைச்சகம்.

கடந்த 9ம் தேதி துவங்கிய கணக்கெடுப்பு, 28ம் தேதி முடிவுக்கு வருகிறது. பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அறிவொளி இயக்கத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் இருப்பவர்கள். அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐந்து கணக்கெடுப்பாளருக்கு, ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது.

காலை, மாலை என அவரவர் வசதிக்கேற்ப, அரை நாள், "அனுமதி' அளிக்கப்படுகிறது. ஒரு கணக்கெடுப்பாளர் சராசரியாக ஒரு நாளைக்கு பத்து வீடுகளில் கணக்கெடுக்கிறார். காலை 6 மணிக்கு துவங்கும் பணி, பல நாட்களில் இரவு 10 மணி வரை நீள்கிறது. இப்படி அகாலமான வேளையில் வீடுகளுக்குச் செல்லும்போது, பெண்கள் நைட்டியுடனும், ஆண்கள் வெற்றுடம்போடும் இருப்பது, கணக்கெடுக்கச் செல்லும் எதிர்பாலினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகிறது.

சென்னை புறநகரில் பார்த்த ஒருவர், வெறும் நாலு முழம் துண்டுடன் தான், அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மேற்கு மாம்பலத்தில் கணக்கெடுத்த ஒரு பெண்ணின் நிலை இன்னும் மோசமானது. இரவு 7.30 மணிக்கு ஒரு வீட்டுக்குப் போனார். குடும்பத்தின் மூத்த குடிமகன், முட்ட முட்டக் குடித்திருந்தார். எல்லாவற்றுக்கும் எடக்கு மடக்கான பதில்கள் தான். "எத்தனை குழந்தைகள்? எனக் கேட்டால், "இந்த வீட்டுல ரெண்டு, அந்த வீட்டுல ரெண்டு' என பதில். நல்லவேளையாக, அருகிலேயே அவரது மனைவியும் இருந்ததால், தப்பித்தோம் பிழைத்தோம் என, கிடைத்த தகவல்களைப் பெற்றுக்கொண்டு, "எஸ்கேப்' ஆனார் பெண்.

மதத்தைத் தைரியமாகக் குறிப்பிடுபவர்கள், பட்டியலினத்தவரா, இல்லையா எனக் குறிப்பிடுவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஜாதி, ஊனம், பிறப்பு, இறப்பு பற்றிய கேள்விகள், தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான கேள்விகளுக்கு, குத்து மதிப்பான பதில்கள் சொல்லப்படுவது கவலைக்குரிய விஷயம். வேறு வேறு விதமாக கேள்விகள் கேட்டு, உண்மையான பதிலை யூகிக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான கணவன்களுக்கு, மனைவியைப் பற்றியும், மனைவியருக்கு, கணவன்களைப் பற்றியும் விவரம் (பிறந்த தேதி, பிறந்த ஊர், படிப்பு, பணியின் பெயர்) தெரியவில்லை.

சராசரியாக ஒரு வீட்டுக்கு, 20 நிமிடம் ஆகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும், குடும்பத்தில் உள்ள படித்தவர்கள், படிக்காதவர்கள், குழந்தைகள் என, பல்வேறு தகவல்களின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுகின்றனர். 28ம் தேதி இரவு, தத்தம் பகுதிகளுக்குச் சென்று, தெருவில் படுத்திருப்போரின் விவரத்தைச் சேகரிக்க உள்ளனர். அவர்கள், இதற்கு முன் கணக்கில் சேர்க்கப்படவில்லை எனில், வீடற்ற நபர்களாக குறிக்கப்படுகின்றனர். அன்று இரவு, துறைமுகங்களில் நிற்கும் கப்பல்களிலும் கணக்கெடுப்பு நடக்கும்.

மக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பது தான், இந்தக் கணக்கெடுப்பின் மிகப் பெரிய சிக்கல். ஓட்டுப்பதிவன்று அரசியல்வாதிகள் கொடுப்பது போல, ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்தால், ஆர்வமாக பதில் சொல்வரோ, என்னவோ...!

2 comments :

ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்தால், ஆர்வமாக பதில் சொல்வரோ, என்னவோ...! good yaaa!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் கம்பியூட்டர் ஆப்பரேட்டராக பல பட்டதாரிகள் நியமிக்கப்பட்டு தகவல் பதிவு செய்யப்பட்டது. இந்த பணியை தனியார் நிறுவனஙகள் மூலமாக நகராட்சிகள் செய்கிறது. ஆனால் பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர், சம்பளம் கொடுக்கப்படவில்லை. இது குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தில் புகார் செய்ய விருப்பம், ஆனால் முகவரி மற்றும் வழிமுறைகள் தெரியவில்லை...

உதவி செய்ய முடியுமா?...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!