சென்னை: தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 31 சட்டசபை தொகுதிகளும், 2013ல் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளன. முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் நேற்று காலை 9 மணிக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். இரண்டு மணி நேரம் நடந்த சந்திப்பின் போது, இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு முடிவானது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், ராமதாசும் கையெழுத்திட்டனர்.
வெளியில் வந்ததும், ராமதாஸ் நிருபர்களிடம் கூறும் போது, என் பேரன் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க, முதல்வரை சந்திக்க வந்தேன். தேர்தல் உடன்பாட்டையும் முடித்துக் கொண்டு திரும்பியுள்ளேன். மகிழ்ச்சியுடன் முதல்வரை சந்திக்கச் சென்ற நான், மகிழ்ச்சியுடன் திரும்பியுள்ளேன் என்றார்.
காங்கிரஸ் அதிர்ச்சி! தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, சோனியாவை சந்திக்க டில்லி சென்ற முதல்வர் கருணாநிதி பேட்டியளிக்கும்போது, "பா.ம.க., எங்கள் கூட்டணியில் உள்ளது' என்று தெரிவித்தார். கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கேட்டதற்கு, "செக்' வைக்கும் வகையில், பா.ம.க., குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டதாக கூறப்பட்டது. இதை பா.ம.க., தலைவர் ராமதாஸ் மறுக்கவே, பரபரப்பு ஏற்பட்டது. முதல்வருடனான சந்திப்பின்போது, "பா.ம.க.,வுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனக் காரணம் காட்டி, காங்கிரசுக்கான தொகுதிகளை குறைக்கக் கூடாது' என, சோனியா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், "கூட்டணியில் பா.ம.க., சேர்வதை சோனியா விரும்பவில்லை' என, தி.மு.க., பொதுக்குழுவில் கருணாநிதி தெரிவித்தார்.
பா.ம.க.,வை அழைத்து பேசி, அவர்களுக்கு 31 தொகுதிகளை ஒதுக்குவதாக நேற்று தி.மு.க., அறிவித்தது. இந்த அறிவிப்பால், காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. 80 முதல் 100 தொகுதிகளை கேட்டு, காங்கிரஸ் பேரம் நடத்தி வரும் நிலையில், பா.ம.க.,விற்கு வாரி வழங்கியுள்ளதால், காங்கிரசுக்கான தொகுதி ஒதுக்கீடு குறையும் என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
பா.ம.க.,வை காரணம் காட்டி, காங்கிரசுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க, டில்லி பயணத்தின் போது தி.மு.க., போட்ட திட்டத்தை, அக்கட்சி இப்போது செயல்படுத்தி விட்டது என்ற குமுறல் காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ளது.
1 comments :
பா.ம.க வரவால் பலம் அடைந்தது தி.மு.க. கூட்டணி
http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_20.html
Post a Comment