உலக கோப்பை போட்டிகளில் "சிக்சர்கள்' பறக்கும் போது, ரசிகர்கள் மட்டுமல்ல வசதியற்ற குழந்தைகளும் மகிழ்ச்சி அடையலாம். இம்முறை ஒவ்வொரு சிக்சருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான நிதி, ஏழை குழந்தைகளின் கல்விக்காக அளிக்கப்பட உள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், வீரர்கள் "சிக்சர்கள்' அடிக்கும் போதெல்லாம், ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டும். இம்மகிழ்ச்சியை நல்ல காரியத்துக்கு பயன்படுத்த, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) முடிவு செய்தது. இதற்கு "ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம் கைகொடுத்தது. இதன்படி ஒவ்வொரு "சிக்சருக்கும்' தலா 25 ஆயிரம் ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனமும் வழங்கும். இத்தொடரில், நூற்றுக்கணக்கான "சிக்சர்கள்' அடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கில் நிதி கிடைக்கும். இது வசதியற்ற குழந்தைகளின் கல்விப் பணிக்காக பயன்படுத்தப்படும். இவர்கள் படிப்பதற்கு நூலகம், வசதியான அறை, ஆங்கிலம் கற்க தேவையான புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் வசதியற்ற 300 குழந்தைகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் சேவக் 5, கோஹ்லி 2 "சிக்சர்கள்' அடித்தனர். வங்கதேச வீரர்களான தமிம் இக்பால், சித்திக், ரகிபுல் ஹசன் தலா ஒரு சிக்சர் அடிக்க, மொத்தம் 10 "சிக்சர்' அடிக்கப்பட்டன. இதன் மூலம் துவக்க போட்டியில் மட்டும் 2.5 லட்சம் ரூபாய் நிதி கிடைத்துள்ளது.
ஐ.சி.சி.,யின் இந்த "சிக்சர்' திட்டத்துக்கு இந்தியாவின் சச்சின், தோனி, பாண்டிங்(ஆஸி.,), டேல் ஸ்டைன்(தென் ஆப்ரிக்கா), வாட்சன்(ஆஸி.,) போன்ற முன்னணி வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். உலக கோப்பை போட்டிகள், போகப் போக விறுவிறுப்பு அடையும். அப்போது இன்னும் அதிகமான "சிக்சர்கள்' அடிக்கப்படும். இதன் மூலம் நிறைய குழந்தைகள் பயன் அடையட்டும்.
0 comments :
Post a Comment