Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 22, 2011

கோப்பையை வெல்ல என்ன தகுதிகள் வேண்டும்?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று விட்டது மிகவும் மகிழ்ச்சி. இந்திய பேட்ஸ்மேன்கள் சேவாக், விராட் கோலி ஆகியோர் ரன் குவிப்பில் சாதனை படைத்துள்ளனர், அவர்களுக்குப் பாராட்டுகள்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் வலுவானது என்பது தெரியவந்த போதிலும், பீல்டிங், பந்து வீச்சில் அணி எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதும் அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டதை எவராலும் மறுக்க முடியாது.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச வீரர்கள் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 ஓவர்களில் 283 ரன்கள் குவித்துள்ளனர். இது சாதாரண விஷயமல்ல. 370 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை நோக்கி விளையாடும்போது பலம் வாய்ந்த அணிகளே தடுமாறி விரைவில் ஆட்டமிழந்துவிடும். ஆனால் வங்கதேச வீரர்கள் சிறப்பாக ஆடி கடைசி வரை வெற்றிக்குப் போராடினார்கள். டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைக்காமல், அவர்கள் பேட் செய்து இதே 283 ரன்களை எடுத்திருந்தால் கூட, இந்திய அணி போராடித்தான் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்.

போட்டிக்குப் பின் பேட்டியளித்த கேப்டன் தோனி, இந்திய அணியின் பந்து வீச்சும், பீல்டிங்கும் சிறப்பாக இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். அதனை மேம்படுத்துவோம் என்றும் தெரிவித்தார். வங்கதேச வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துகளை எவ்வித சிரமமும் இன்றி எதிர்கொண்டனர். குறிப்பாக ஸ்ரீசாந்தின் பந்துகளை விளாசித் தள்ளி ரன் குவித்தனர். அன்றைய தினத்தில் ஸ்ரீசாந்தின் பந்து வீச்சு முற்றிலுமாக எடுபடவில்லை. 5 ஓவர்கள் வீசிய அவர் 53 ரன்களை வாரி வழங்கினார். ஒரு விக்கெட்டை கூட அவரால் வீழ்த்த முடியவில்லை. வங்கதேசத்திடம் இப்படி என்றால் எதிர் வரும் லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் அவரது பந்துகள் என்னபாடுபடப் போகிறதோ தெரியவில்லை.

பொதுவாக பேட்டிங், பீல்டிங், பந்து வீச்சு என மூன்று துறைகளில் வலுவாக உள்ள அணிதான் தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க முடியும். முந்தைய மூன்று உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா தொடர்ந்து வென்றதற்கு இம்மூன்று துறைகளில் அவர்கள் மிளிர்ந்ததே காரணம். வலுவான பேட்டிங் அல்லது வலுவான பந்து வீச்சு என ஒரே துறையை மட்டும் நம்பி களம் இறங்கும் அணிகள் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றதில்லை என்பது கடந்த கால வரலாறு.

பொதுவாக கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் தங்களுடைய பலத்தை மட்டுமின்றி எதிர் அணிகளின் பலவீனத்தை சாதகமாக்கி வெற்றிபெறும் எண்ணத்துடன்தான் களம் இறங்கும். ஓர் அணியுடன் விளையாடும் முன் அந்த அணியின் வீரர்கள் பிற அணிகளுடன் எப்படி விளையாடியுள்ளனர் என்பதை வீடியோ பதிவில் பார்த்துத்தான் வியூகம் வகுக்கின்றனர்.

இந்த வகையில் இந்திய அணியின் பலவீனம் என்ன என்பதை அடுத்து வரும் லீக் ஆட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக ஆடவுள்ள இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் உணர்ந்து அதற்கு ஏற்ப வியூகம் அமைத்து ஆடும். அயர்லாந்து நெதர்லாந்து அணிகளை இந்தியா வெல்வது பெரிய விஷயமாக இருக்காது என்று நம்பப்படுகிறது. அதுவும் பலிக்க வேண்டும்.

ஆனால் தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் சிறப்பான பந்து வீச்சாளர்களை மட்டுமின்றி, வலுவான பேட்டிங் வரிசையையும் கொண்டுள்ளது. இந்திய அணி இப்போதுள்ள நிலையிலேயே பந்துவீச்சைத் தொடர்ந்தால் அந்த அணிகளுடனான ஆட்டத்தில் வெற்றி பெறுவது கடினமாகிவிடும். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை நடைபெற்ற லீக் ஆட்டங்களில் இலங்கை, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள், முறையே கனடா, கென்யா, ஜிம்பாப்வே ஆகிய அணிகளை எதிர்கொண்டு வென்றுள்ளன.

இந்த அணிகள் பெற்ற வெற்றியில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய மூன்று துறைகளின் பங்களிப்பும் சமஅளவில் இருந்ததை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
குறிப்பாக கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை பெற்ற வெற்றியும், கென்யாவுக்கு எதிராக நியூஸிலாந்தின் வெற்றியும் பிரமாண்டமானவை. இலங்கை 210 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நியூஸிலாந்து 69 ரன்களில் கென்யாவைச் சுருட்டியது.

இவற்றுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் வெற்றி பிரமாண்டமானதல்ல, முதலில் பேட் செய்து எடுத்த ஸ்கோர் (370 ரன்கள்) மட்டுமே பிரமாண்டமானது. இந்திய அணி தனது வெற்றியையும் பிரமாண்டமானதாக்க தேவை சிறந்த பந்துவீச்சும், பீல்டிங்கும் தான். பேட்டிங் மட்டுமல்லாது மற்ற பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டால்தான் உலகக் கோப்பை வெல்லும் கனவு நனவாகும்.

2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி ஆட்டம் வரை இந்தியா முன்னேறியதற்கும் ஆசிஷ் நெஹ்ரா, ஜாகீர்கான் ஆகியோரது சிறப்பான பந்து வீச்சே காரணம். அந்த உலகக் கோப்பையில் நெஹ்ரா 9 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான் 11 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அவர்களின் பந்து வீச்சு எடுபடாததும், அப்போது இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்ததற்கு முக்கியக் காரணம்.

சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான நெஹ்ராவும், ஜாகீர்கானும் இப்போதும் அணியில் இடம் பெற்றுள்ளனர். எனினும் காயம் காரணமாக நெஹ்ரா களம் இறங்க முடியாமல் போனது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏற்கெனவே உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த பிரவீண் குமாரும் அணியில் இருந்து விலகிவிட்டார்.
நமது பந்து வீச்சாளர்கள் காயத்தில் இருந்து மீண்டும், சிறப்பாக பந்து வீசும்பட்சத்தில் இந்தியாவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!