சென்னை : பொறியியல் கவுன்சிலிங்கில், தனியார் கல்லூரியில் சேர்க்கை உத்தரவு பெறும் மாணவர்கள், உடனடியாக கட்டணத்தை செலுத்த வேண்டும் என, பல்வேறு கல்லூரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.
பணம் கட்டிய பின், மருத்துவம் உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு மாற முடிவெடுத்தால், கட்டிய பணம் திரும்பத் தர முடியாது என கல்லூரிகள் கூறுவதால், என்ன செய்வதென புரியாமல் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கவுன்சிலிங் ஏற்கனவே முடிந்து விட்டது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், இம்மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பித்த மாணவர்களில் பலருக்கு, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும், அதை உதறிவிட்டு, பொறியியலில் சேர்ந்துள்ளனர். அதேபோல், பொறியியலில் அண்ணா பல்கலையில் சேர வாய்ப்பு கிடைத்தும், அதில் சேராமல், மருத்துவ படிப்புகளை தேர்வு செய்துள்ளனர்.
முதல்கட்ட மருத்துவ படிப்பு கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காத பல மாணவர்கள், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை எதிர் பார்த்து காத்திருக்கின்றனர். இந்த மாணவர்களில் பலருக்கு, பொறியியல் கவுன்சிலிங்கில் அழைப்பு வந்துவிட்டதால், அதை நிராகரிக்க மனமில்லாமல் கவுன்சிலிங்கில் பங்கேற்று, சேர்க்கை உத்தரவுகளை பெற்றுள்ளனர். எனினும், மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் வரை, பொறியியல் கல்லூரிகளில் சேராமல் காத்திருக்கலாம் என நினைத்திருந்த மாணவர்களுக்கு, தனியார் கல்லூரிகளின் அறிவிப்பு இடியாக விழுந்துள்ளது.
கவுன்சிலிங்கில், தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்துள்ள மாணவர்கள், இம்மாதம் 20ம் தேதிக்குள் நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணத்தை முழுவதும் செலுத்த வேண்டும் என, கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், வேறு முடிவு எடுத்துவிடக் கூடாது என்பதற்காகவும், அவர்களை, "பிடித்து' வைத்து விட வேண்டும் என்பதற்காகவும், கட்டணத்தை செலுத்துமாறு, கல்லூரி நிர்வாகங்கள் வற்புறுத்தி வருகின்றன. பணத்தை கட்டிய பின், வேறு படிப்புகளுக்கு மாற நினைத்தால், கட்டிய பணம் திரும்பக் கிடைக்காது என கூறுவதால், மருத்துவ கவுன்சிலிங்கை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள், பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
0 comments :
Post a Comment