கொழும்பு : இலங்கை ராணுவத்தின் போர் குற்றம் என்ற பெயரில், பொய்யான வீடியோவை தயாரித்ததாக, பிரிட்டன் குடியுரிமை பெற்ற ஒருவரை, இலங்கை போலீசார் கைது செய்தனர்.
இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட போரின் போது, இலங்கை ராணுவ வீரர்கள், போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ராணுவ வீரர்கள், மனித உரிமைகளை மீறி செயல்படுவது, கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கண்களை கட்டி, துப்பாக்கியால் சுடுவது, பெண் விடுதலைப் புலிகளை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்ற வீடியோவை, பிரிட்டனின் சேனல்-4 என்ற "டிவி' சமீபத்தில் ஒளிபரப்பியது. இது, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரிட்டன் "டிவி' நிறுவனத்துக்கு, போர்க்குற்றம் என்ற பெயரில், பொய்யான வீடியோவை தயாரித்து வழங்கியதாக, பிரிட்டன் குடியுரிமை பெற்ற, கந்தனம் ஜெகதீஷ்வரம் என்ற நபரை, இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், இலங்கையை பூர்வீகமாகக் கொண்டனர்.
இதுகுறித்து இலங்கை போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கைது செய்யப்பட்டுள்ள நபர், கடந்த 21 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். அவ்வப்போது இலங்கைக்கு வந்து செல்வார். இலங்கை ராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது போன்ற பொய்யான வீடியோவை, இவர் தயாரித்து, சேனல்-4 நிறுவனத்துக்கு வழங்கியது தெரியவந்தது. கண்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்து, 71 டி.வி.டி.,க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவரை கைது செய்வதற்கு, கொழும்பு கோர்ட்டில் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. பொய்யான வீடியோ காட்சிகளை தயாரித்ததன் மூலம், நாட்டின் புகழுக்கும், ராணுவத்துக்கும் அவமதிப்பை ஏற்படுத்திய குற்றத்துக்காக, இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment