நெல்லை மாவட்டம் புளியங்குடி நகரில் உள்ள பள்ளிகளில் குறிப்பாக 12 தனியார் தமிழ் வழி உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் 10 மற்றும் +2 தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி என்று காட்டுவதற்காக சில குள்ளநரித்தன காரியங்களை மேற்கொண்டுள்ளன.
தங்களிடம் பயிலும் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களை கட்டாயமாக வெளியேற்றுகின்றனர். இச்சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடருவதை கண்டு, பெற்றோர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் திகைத்தனர். அதோடு வெளியேற்றப்படும் மாணவ மாணவிகள் வேறு பள்ளிகளில் தங்களது படிப்பை தொடருவதற்கு முயன்றாலும் அங்கேயும் அவர்களுக்கு முட்டுக்கட்டைகள்.
இதனால் மனம் புழுங்கிய பெற்றோர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதண்மை கல்வி அலுவலர், தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் போன்றவர்களுக்கு புகார் மனு அனுப்பினர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது அரசு.
புகாருக்குள்ளான புளியங்குடியின் அந்த 12 தனியார் பள்ளியின் பொறுப்பாளர்களை ஆவணங்களோடு வரவழைத்து விசாரணை நடத்தினார் தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயக்கண்ணு. அப்போது குறிப்பிட்ட மூன்று பள்ளிகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் சில மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்பட்டது தெரியவந்தது.
சான்றிதழ் மாணவர்களுக்கு கொடுக்கும் முன்னரே பெற்றோர்கள் இதைப் பெற்றுக்கொண்டதுபோல, பள்ளி நிர்வாகம் கையெழுத்து வாங்கியது அம்பலமானது. இதனையடுத்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என அப்பள்ளிகளை கடுமையாக எச்சரித்த தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயக்கண்ணு, இனிமேல் இதுபோன்ற மாணவர்களை வெளியேற்ற மாடடோம் என்ற எழுத்துபூர்வமான உறுதிமொழியையும் வாங்கிக்கொண்டார்.
இந்த அறிக்கைகள் மாவட்ட முதண்மை கல்வி அலுவலர், மாநில பள்ளி கல்வித்துறை இயக்குநர் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சிருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தீண்டாமை ஒரு மனித நேயமற்ற செயல். பெருகுற்றம் என்று போதிக்கின்ற தமிழ்வழி பள்ளிகளிலேயே மாணவர்களை இனப்பாகுபாடு செய்வதும், ஒரு தீண்டாமையே என்கிறார்கள் புளியங்குடி மாணவர் பெற்றோர் கழகத்தினர்.
0 comments :
Post a Comment