ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் விற்கப்பட்ட தண்ணீர் பாக்கெட்டுகளில் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் சிவகங்கை மாவட்ட கழகம், அம்மா என்ற பெயர் அச்சிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது.
இதையடுத்து உஷாரான கட்சியினர் போலீசாரிடம் கூறி டாஸ்மாக் பார்களில் உள்ள இத்தகைய தண்ணீர் பாக்கெட்டுகளை உடனே அப்புறப்படுத்தும்படி கேட்டுக் கொண்டனர். தண்ணீர் பாக்கெட்டுகளில் சிவகங்கை மாவட்ட கழகம் என அச்சடிக்கப்பட்டதால் அங்குள்ள பார்களிலும் இந்த பாக்கெட்டுகள் உள்ளதா எனவும் கட்சியினரே விசாரித்தனர்.
தமிழ்முரசில் நேற்று வெளியான இச்செய்தியைப் பார்த்ததும் இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தும்படி ராமநாதபுரம் டிஐஜி சந்தீப்மித்தலுக்கு காவல்துறை தலைமை உத்தரவிட்டது., அவரது உத்தரவுப்படி காரைக்குடி டிஎஸ்பி மங்களேஸ்வரன் விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதனால் அதிமுகவினர் கலக்கமடைந்தனர்.
தென் மாவட்டங்களில் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தின்போது வாஷ்கி மினரல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 2 லட்சம் பாக்கெட்டுகள் கட்சியினரால் வாங்கப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளது. மீதமிருந்த சில மூட்டைகளை டாஸ்மாக் கடைகளுக்கு விற்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.
கட்சிக்குள் உள்ள கோஷ்டி பிரச்னையில் யாரையாவது, மேலிடத்தில் மாட்டிவிட்டு பழிவாங்க வேண்டும் என்பதற்காக, திட்டமிட்டு சதிச்செயலில் யாரும் ஈடுபட்டனரா என அதிமுக முக்கிய நிர்வாகிகள் மாறி, மாறி ரகசிய விசாரணை நடத்தி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment