டைட்டானிக் கப்பல் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. "மிதக்கும் சொர்க்கம்' என, வர்ணிக்கப்பட்ட இந்த ஆடம்பர சொகுசு கப்பல், 1912ல், தன் முதல் பயணத்தை துவக்கியது., மிகப் பெரிய செல்வந்தர்கள், போட்டி போட்டு, டிக்கெட் வாங்கி, இந்த கப்பலில் பயணித்தனர். வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்ற போது, கடலில் உருவாகியிருந்த பனிக் கட்டி பாறையில் மோதிய இந்த கப்பல், படிப்படியாக, கடலுக்குள் மூழ்கியது. இந்த சம்பவத்தில் ஏராளமானோர், உயிருடன் ஜல சமாதி ஆயினர்.
இந்த கப்பலின் கேப்டனாக இருந்தவர் எட்வர்ட் ஜான் ஸ்மித்; விபத்தில், இவரும் பலியாகி விட்டார். இவர் பயன்படுத்திய அழகான சிகரெட் பெட்டி ஒன்று, சமீபத்தில் ஏலத்துக்கு வந்தது. அரிய வகை மரக் கட்டையில் வடிவமைக்கப்பட்ட இந்த பெட்டியில், நாற்பது சிகரெட்டுகளை வைக்க முடியும். பெட்டியின் மேலே, டைட்டானிக் கப்பலை வடிவமைத்த, கப்பல் நிறுவனத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் பயன்படுத்திய பெட்டி என்பதற்கு ஆதாரமாக, இ.எம்.எஸ்., என்ற ஆங்கில எழுத்துக்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்த பெட்டி, பிரிட்டனைச் சேர்ந்த ஹிலாரி மீ என்ற பெண்ணின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி ஹிலாரி கூறுகையில், "கேப்டன் எட்வர்டின் மனைவி சாராவிடம் இருந்த இந்த பெட்டியை, என் தந்தைக்கு, யாரோ பரிசாக கொடுத்துள்ளனர்; மற்றபடி, இந்த பெட்டிக்கும், டைட்டானிக் கப்பலுக்கும் உள்ள தொடர்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது...' என்றார்.
நூறு ஆண்டுகளுக்கு முன், கடலுக்குள் புதைந்து போன டைட்டானிக் கப்பலுடன் தொடர்புடைய, ஒவ்வொரு பொருளுக்குமே, பெரிய அளவில் இன்னும் கிராக்கி இருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.
1 comments :
எப்பவும் போல இன்னிக்கும் அருமை.
Post a Comment