கடந்த பிப்ரவரியில் நிறைவடைந்த 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்த மக்கள் தொகை 121 கோடி என, தெரியவந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 18 கோடி அதிகரித்திருக்கிறது.மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையும் பெருமிதம் கொள்ள வைக்கிறது. அதேசமயம் புள்ளிவரங்களின் மற்றொரு பகுதி ஜீரணிக்க முடியாத கசப்பைத் தருகிறது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஆண், பெண் பாலின விகிதம் 1000:940 ஆக இருக்கிறது. இந்த விகிதம் கடந்த 2001ல் 1000:933 ஆக இருந்தது.
ஆனால், ஆறு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை, அதே வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் மிகப்பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது. கடந்த 1961ம் ஆண்டில் 1000:978 என்ற விகிதத்திலும்; 2001ல் 1000:927 ஆக இருந்த சிறுவர், சிறுமியரின் பாலின விகிதம் தற்போது 1000:914 என்ற அளவை எட்டி இருக்கிறது. ஆறுவயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையே 15.88 கோடிதான். இது 2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 50 லட்சம் குறைவு.சிறுமிகளின் எண்ணிக்கை இந்த அளவு குறைந்திருப்பது, எதிர்காலத் தலைமுறைக்கு சமூக உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். திருமண உறவுகளில் இந்த விகிதாச்சாரம் எதிரொலிப்பதால், வருங்கால தலைமுறை சமூக உறவுகளில் விரும்பத்தகாத மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் ஏற்படும்."பாலின விகிதம் இப்படிச் சரிந்தால், ஒரு தலைமுறையே ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் அபாயம் இருக்கிறது' என்ற மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாவின் கருத்து, முகத்தைச் சுளிக்க வைப்பதாக இருந்தாலும், அதில் உண்மை இல்லாமல் இல்லை.
இளம் பெண்களுக்கான சமூக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, அவர்களின் திருமணத்துக்காக செலவிடப்படும் தொகை, ஆண் குழந்தை வாரிசுரிமை மோகம் போன்றவை பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டதற்கு காரணம். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் தானாக குறையவில்லை; குறைக்கப்பட்டிருக்கிறது.பெண் சிசுக்கொலை குறைந்திருக்கிறது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறியும் சோதனை நகரங்களில் இன்னும் தாரளமாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
ஆண், பெண் பாலின விகிதத்தில் உள்ள வேறுபாட்டைக் களைய அரசு துரித நடவடிக்கை எடுத்தாக வேண்டும். பெண் குழந்தை வளர்ப்பை ஊக்குவிக்க, கூடுதல் சலுகைகள் அளிக்க வேண்டும். பெண் சிசுக்கொலை மீதான கண்காணிப்பை மேலும் இறுக்க வேண்டும். கலாசாரத்தில் சிறந்த நாடு, நதிகளுக்கும், நிலத்துக்கும் பெண் பெயரைச் சூட்டி பெருமிதம் கொள்ளும் நாடு என வெற்றுப் பரப்புரைகள் இனி உதவாது. பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் அதிகரிக்கப்பட்டு, பெண் குழந்தைப் பிறப்பு விகிதம் அதிகரிக்கச் செய்வதற்கான நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும்.
1 comments :
மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கவலைதரும் இந்த புள்ளிவிவரம் கவனத்திற்குரியது தேவை உரிய நடவடிக்கைக்கான விவாதங்கள் .இது குறித்து வெளியிடப்பட்ட்ட செய்தி கட்டுரை வரவேற்ப்பு குரியது
Post a Comment