எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, தேர்தல் கமிஷன் சட்ட விதிமுறைகளை கெடுபிடியாக கடைபிடித்ததால், கடந்த தேர்தல் காலங்களில் இருந்த பரபரப்பும், தேவையற்ற ஆர்ப்பாட்டங்களில் இருந்தும் மக்கள் தப்பினர்.
அதே நேரம், பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் கமிஷன் அதிரடியாக களம் இறங்கிய போதும், போலீசாரின் ஒத்துழைப்பு இல்லாமல் பல இடங்களில் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியாமல் போனது. சில இடங்களில் எதிர்க்கட்சிகளும், சில இடங்களில் பொதுமக்களும் பணப் பட்டுவாடாவை தடுக்க எடுத்த முயற்சிக்கு, தேர்தல் அலுவலர்கள் கை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
கடந்த இரு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களில், குறிப்பாக, மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியிலும், கடந்தாண்டு இறுதியாக நடந்த தர்மபுரி மாவட்ட பென்னாகரம் இடைத்தேர்தலிலும், தி.மு.க., எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு, வாக்காளர்களுக்கு, பணத்தை வாரி வழங்கியது. ஒரு ஓட்டுக்கு, 1,000 முதல், 2,000 ரூபாய் வரை வழங்கப்பட்டது.தி.மு.க.,வின் பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை எதுவும் பலிக்கவில்லை. பென்னாகரம் இடைத்தேர்தலின் போது, பா.ம.க.,வினர் தேர்தல் பணியில் மிக முக்கிய பங்காக, தி.மு.க.,வின் தேர்தல் பண வினியோகத்தை தடுக்க, பல்வேறு முயற்சிகள் எடுத்ததால், கட்டுக்கட்டாக பணம், வேட்டி, சேலைகள் பிடிக்கப்பட்டன. அதையும் மீறி தேர்தலில் பணப் பட்டுவாடா தடுக்க முடியாமல் போனது.தற்போதைய தேர்தலில், தேர்தல் கமிஷன் பண வினியோகத்தை தடுக்க ஒரு மாதமாக சோதனைச் சாவடிகள் அமைத்தும், பறக்கும் படை அமைத்தும் பண கடத்தலை தடுக்க முயற்சி எடுத்தது. இந்த முயற்சியில் வியாபாரிகளும், அப்பாவி மக்களும் மட்டுமே சிக்கினர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதியிலும், தி.மு.க., கூட்டணி கட்சியினர் இறுதிக்கட்ட பணப் பட்டுவாடா முயற்சிகளில் களம் இறங்கினர். பல இடங்களில் எதிர்க்கட்சியினர், போலீசாருக்கும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கும் புகார் அளித்தும், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. பல இடங்களில், அ.தி.மு.க., கூட்டணியினரும் தங்களுக்கு பலகீனமாக உள்ள சில இடங்களில், பணப் பட்டுவாடாவில் இறங்கினர். தி.மு.க., கூட்டணி கட்சியினர், ஓட்டுக்கு, 200 ரூபாய் என, கடந்த மூன்று நாட்களாக வழக்கம் போல் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்.
0 comments :
Post a Comment