புது தில்லி : தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 54 கோடி பறிமுதல் செய்யப்பட்டது, இது தொடர்பாக 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 75.21 சதவீதம், புதுவையில் 83.62 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த தேர்தலின் போது தமிழகத்தில் 70.84 சதவீதம், புதுவையில் 84 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலின்போது வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 54.17 கோடி பிடிபட்டுள்ளது.
இதில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினரால் ரூ. 29.87 கோடியும், மாநில காவல்துறையினரால் ரூ. 9.24 கோடியும், வருமான வரித் துறையினரால் ரூ. 15.06 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல்வேறு கட்சியினர் மீது மொத்தம் 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன் 54,314 வாக்குச் சாவடிகளில் 45 வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்காததை கண்டுபிடித்து, அவற்றுக்குப் பதிலாக புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் முதல் முறையாக 9,500 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்வதை நேரிடையாக வெப் கேமரா மூலம் கண்காணித்து உள்ளோம். இதைத் தவிர 28,909 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுவதை விடியோ கேமரா மூலம் பதிவு செய்துள்ளோம். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தல் நேர்மையாகவும் அமைதியாகவும் நடைபெறுவதை கண்காணிக்க 121 பொதுப் பார்வையாளர்கள், 3,258 தேர்தல் செலவு கண்காணிப்பாளர்கள், 6,788 நுண் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். வாக்குச் சாவடி காவல் பணி 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து தேர்தல் பணிகளுக்குமாக மொத்தம் 2,88,749 துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
புதுவையை பொறுத்தவரை வாக்குப்பதிவு நடைபெற்றபோது பழுதான 3 வாக்கு பதிவு எந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டன. 30 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. வன்முறை, வாக்குவாதம் போன்ற எதுவும் நடைபெறவில்லை. அனைத்து 867 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு விடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. 12 தேர்தல் பார்வையாளர்களும், 42 தேர்தல் செலவு கண்காணிப்பாளர்களும் ஆய்வு செய்தனர். தேர்தல் பணிகளில் 6,089 துணை ராணுவ பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்றார் அவர்.
0 comments :
Post a Comment