தமிழகத்தில் உள்ள அனல், புனல், காற்றாலை, காஸ், மரபுசாரா எரிசக்தி, மத்திய மின் தொகுப்பில் இருந்து கிடைக்கும் பங்கு என, மொத்தம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் பெற முடியும். இதில், காற்றாலை மூலம், 4,800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யலாம்.தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, கோவை உட்பட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில், காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் மே மாதம், தென்மேற்கு பருவக் காற்று, தீவிரமடையும். அப்போது காற்றாலைகள் மூலம், அதிகபட்சம், 2,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.கோடைக் காலம் துவங்கியதால், தமிழகத்தின் மின் தேவை அதிகரித்துள்ளது. சராசரியாக, 1,400 மெகாவாட் மின் பற்றாக்குறை இருப்பதால், சென்னை தவிர புறநகர் பகுதியில் தினமும், மூன்று முதல் ஐந்து மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது.
விவசாயத்துக்கு, 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வினியோகிக்கப் படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்தும், மின் பற்றாக்குறை நீடிப்பதால், மின்தடையை சமாளிக்க வாரியம் திணறுகிறது.கடந்த 14ம் தேதி, திடீரென தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்ததால், காற்றாலைகளில் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது, மின்வாரியத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், காற்றின் தீவிரம் குறைந்ததால், இரு நாட்களாக, 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது. காற்றாலை மின்சாரம் மூலம், கோடைகால மின் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும் என்பதால், தென்மேற்கு பருவக்காற்றை எதிர்பார்த்து மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
0 comments :
Post a Comment