நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்தது போல், இம்முறை உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்வாரா...? என்ற ஆவல் எழுந்துள்ளது.
விஜயகாந்த் மீதுள்ள காழ்புணர்ச்சியால், தே.மு.தி.க., வும் எதிராகவும், தி.மு.க.,வுக்கு ஆதரவாகவும் சட்டமன்ற தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் வடிவேலு. சகநடிகர், ஒரு கட்சிக்கு தலைவர் என்று கூட பாராமல் விஜயகாந்தை கன்னா, பின்னா என்று வசைபடினார். செல்லும் இடமெல்லாம் வடிவேலு பிரச்சாரத்திற்கு ஏகப்பட்ட கூட்டம் கூடியது. வர்றகூட்டம் எல்லாம், நிச்சயமாக திமுக.வுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று மனக்கணக்கு போட்ட வடிவேலுவுக்கு, தேர்தல் முடிவு பேரிடியை தந்தது.
தேர்தல் முடிவு திமுக.வுக்கு மட்டுமல்லாமல், வடிவேலுவுக்கும் நிச்சயம் ஒரு பேரிடி தான். தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக இருந்த வடிவேலுக்கு தேர்தல் முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகள் கூட எதுவும் இல்லாமல் போய்விட்டது. தமிழகத்தில் தான் வடிவேலு இருக்கிறாரா...? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் போல், உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்ய வருவாரா...? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே வடிவேலுவை தேர்தல் களத்தில் மீண்டும் இறக்க முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வடிவேலு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
ஒருவேளை, மாப்பு... மறுபடியும் வேண்டான்டா ஆப்பு... என்று வடிவேலு ஒதுங்கி கொண்டாரோ என்னமோ..?
0 comments :
Post a Comment