சென்னை யானைகவுனியைச் சேர்ந்தவர் சுப்ரமணி; ஆட்டோ டிரைவர். சிறு வயதிலேயே, குடிப் பழக்கத்துக்கு அடிமையானார். எப்போதும், மயக்கத்தில் இருந்தார். இவருக்கு, மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சரளா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.
இருவரும், தனிக்குடித்தனம் நடத்தினர். குடித்து விட்டு வந்து, மனைவியுடன் தகராறு செய்வார். முதல் குழந்தையை கருவுற்றிருந்த போது, பெற்றோர் வீட்டுக்கு சரளா சென்றார். அங்கும், குடித்து விட்டு சென்று தகராறு செய்தார். பெண் குழந்தை பிறந்தும், அவளை பார்க்க செல்லவில்லை. பெரியவர்கள் பேசி சமாதானம் செய்தனர். சில மாதங்கள் குடித்தனம், அதன் பின் தகராறு என சென்றது. இரண்டாவதாக சரளா கருவுற்றார். குழந்தை பிறப்பதற்கு முந்தைய தினமும் தகராறு தான். மனைவியின் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி வீசியுள்ளார். இரண்டாவதும், பெண் குழந்தை பிறந்தது. இவரது அடாவடி தாங்காமல், போதை மீட்பு மையத்தில் இவரை சேர்த்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்றார். போதையின் பிடியில் இருந்து மீண்டார்.
இதற்கிடையில், இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு கஷ்டப்பட்ட சரளா, ஜீவனாம்சம் தரக் கோரி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்கு வந்தது. தான் திருந்தி விட்டதாகவும், மதுவை தொடுவதில்லை என்றும், மனைவியிடம் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இவ்வழக்கு குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, சுப்ரமணி சார்பில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, சரளா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை வாபஸ் பெற நீதிபதி அனுமதித்தார். இருவரும் ஒன்றாக வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
0 comments :
Post a Comment