சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோருக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் தோனி, காம்பிர் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.
நேற்று முன்தினம் விருது வழங்கும் விழா லண்டனில் நடந்தது. இவ்விழா நடந்த இடத்துக்கு மிக அருகில் இருந்த ஓட்டலில் தான் இந்திய வீரர்கள் தங்கியிருந்தனர். ஆனாலும் விருது நிகழ்ச்சியை புறக்கணித்து அதிர்ச்சி அளித்தனர். ஏற்கனவே இங்கிலாந்துக்கான இந்திய தூதர் கொடுத்த விருந்தை புறக்கணித்து, தோனியின் அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இப்போது ஐ.சி.சி., விழாவையும் தவிர்த்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
யார் காரணம்? : இப்பிரச்னைக்கு அழைப்பிதழ் தாமதமாக கிடைத்தது தான் காரணம் என வீரர்கள் கூறுகின்றனர். இதனை மறுத்த ஐ.சி.சி., ஏற்கனவே அழைப்பிதழை பி.சி.சி.ஐ.,க்கு அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளது. இதனை வீரர்களுக்கு முறைப்படி பி.சி.சி.ஐ., ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. இப்படி ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்துவதால், பிரச்னை பெரிதாகியுள்ளது.
அழைப்பு தாமதம் : இதுகுறித்து இந்திய அணி மானேஜர் ஷிவ்லால் யாதவ் கூறுகையில்,"" விழா குறித்து மதியம் 12 மணிக்குத் தான் எங்களுக்குத் தெரிவித்தனர். அதற்கு முன் வீரர்கள் "ஷாப்பிங் மற்றும் பல இடங்களை சுற்றிப் பார்க்கச் சென்றுவிட்டனர், என்றார்.
ஐ.சி.சி., மறுப்பு : இதுபற்றி ஐ.சி.சி., தகவல் தொடர்பு அதிகாரி காலின் கிப்சன் கூறுகையில்,"" இந்திய வீரர்கள் விழாவில் பங்கேற்க வேண்டும் என, சில வாரங்களுக்கு (ஆக., 26) முன்னதாகவே பி.சி.சி.ஐ.,க்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கான இ-மெயில் ஆதாரம் உள்ளது, என்றார்.
லார்கட் ஆவேசம் : இந்திய வீரர்கள் பங்கேற்காதது குறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாருண் லார்கட் கூறுகையில்,"" விழா குறித்து பி.சி.சி.ஐ.,க்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பியது எனக்குத் தெரியும். அங்கு வந்திருந்த அனைவரும், இந்திய அணியினர் ஏன் வரவில்லை என்று கேட்டனர். இது பெரிய அவமானமாக இருந்தது. தவிர, ஏமாற்றமாகவும் உள்ளது, என்றார்.
டிராட், குக் சிறந்த வீரர் : 2011ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இங்கிலாந்தின் டிராட் தட்டிச் சென்றார். சிறந்த ஒருநாள் வீரர், மக்களின் மனம் கவர்ந்த வீரர் விருதுகள், இலங்கையின் சங்ககராவுக்கு வழங்கப்பட்டது. அலெஸ்ட் குக்கிற்கு (இங்கிலாந்து) சிறந்த டெஸ்ட் வீரராகவும், வளர்ந்து வரும் வீரர் விருது வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷுவுக்கு வழங்கப்பட்டது. நியூசிலாந்தின் டிம் சவுத்தி ("டுவென்டி-20), பெண்கள் கிரிக்கெட்டில் ஸ்டெபானி டெய்லருக்கும் சிறந்த வீரர் விருது கிடைத்தது. ஐ.சி.சி., உறுப்பு நாடுகளின் சிறந்த வீரர் விருதை, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நெதர்லாந்தின் டசாட்டே தட்டிச் சென்றார்.
0 comments :
Post a Comment