தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள அறிவாலயத்துக்குள் சி.பி.ஐ., அதிகாரிகள் புகுந்தனர். "2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், "கலைஞர் டிவி'யின் பங்குதாரர்களான தயாளு, கனிமொழி எம்.பி., ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கீழ்தளத்தில் கட்சியிருடன் அப்போது நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தார் தி.மு.க., தலைவர் கருணாநிதி. தி.மு.க., அலுவலகத்துக்குள்ளேயே சி.பி.ஐ., இரண்டாவது முறையாக புகுந்தது, தி.மு.க., வட்டாரத்தை கலங்கடித்துள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை தொடர்பான ஏலத்தில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி, மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அத்துறையின் மத்திய அமைச்சராக இருந்த தி.மு.க.,வின் ராஜா, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜாவிடம் நடத்திய விசாரணையில் "டி.பி. ரியாலிட்டி' நிறுவனத்தின் உரிமையாளரான பல்வாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக ஆளுங்கட்சி தி.மு.க.,வின், "கலைஞர் டிவி'யில் 214 கோடி ரூபாய் முதலீடு செய்த தகவல் கிடைத்தது. "கலைஞர் டிவி'யைப் பொறுத்தவரை, முதல்வரின் மனைவி தயாளுவுக்கு 60 சதவீத பங்குகளும், மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், அதன் மேலாண் இயக்குனரான சரத் ரெட்டிக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன.
கலைஞர் டிவி' விவகாரத்தை தாண்டி, கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க சி.பி.ஐ., முடிவெடுத்து அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. இதே சூழலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்னைகளும் எழுந்தன. இப்பிரச்னை அடங்கிய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், "கலைஞர் டிவி' பங்குதாரர்களுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. அதில் நேற்று காலை "கலைஞர் டிவி' அலுவலகத்தில் விசாரணை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய வளாகத்தில், "கலைஞர் டிவி' அலுவலகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தி.மு.க., வேட்பாளர்கள் நேர்காணல், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் வேளையில், நேற்று காலை 8.45 மணிக்கு திடீரென, டில்லி சி.பி.ஐ., பெண் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள், சென்னை சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் உதவியுடன் நுழைந்தனர்.அப்போது, "டிவி'யின் மேலாண் இயக்குனர் சரத் ரெட்டி இருந்தார். கனிமொழி, தயாளு இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பிற்பகல் 12.15 மணிக்கு விசாரணை முடிந்து, தயாளு புறப்பட்டார். அடுத்ததாக, கனிமொழியிடமும், தொடர்ந்து சரத் ரெட்டியிடமும் விசாரணை நடந்தது. பகல் 2.10 மணிக்கு விசாரணையை முடித்த சி.பி.ஐ., அதிகாரிகள், 2.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். விசாரணையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தாலும், தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் இன்னும் தி.மு.க., - காங்கிரஸ் இடையில் முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், சி.பி.ஐ.,யின் இந்த விசாரணை நடவடிக்கை, தி.மு.க.,வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ.,யின் அடுத்த கட்ட, "மூவ்' என்ன என்பது, யாருக்கும் தெரியாத நிலையில், என்ன நடக்குமோ என அனைத்து தரப்பும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. சுனாமி போல் "2ஜி' விவ காரம் தி.மு.க.,வை தாக்குவதால், கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.
0 comments :
Post a Comment