சென்னை, மார்ச் : திமுக வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை (16-ம் தேதி) மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் கருணாநிதி, வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார். வரும் 19-ம் தேதி (சனிக்கிழமை) கட்சியின் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிடுகிறார்.
திமுக கூட்டணியில் திமுக 120 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி, 6 நாள்கள் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு செய்திருந்தனர். தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்துடன் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அறிவாலயத்தை முற்றுகையிட்டனர். ஒவ்வொரு தொகுதிக்கும் மனு தாக்கல் செய்தவர்களை இரண்டு, மூன்று குழுக்களாகப் பிரித்து நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், கட்சியின் தென் மண்டல பொறுப்பாளர் மு.க. அழகிரி உள்பட மூத்த அமைச்சர்கள் பங்கேற்று வேட்பாளர்களைத் தேர்வு செய்தனர்.
நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவுபெற்றது. இதையடுத்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றது. தங்களது ஆதரவாளர்களுக்குத் தொகுதிகளைப் பெற்றுத்தருவதில் ஸ்டாலின், அழகிரி இருவரும் ஆர்வம் காட்டியதாகக் கூறப்பட்டது.
பின்னர், வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் இருவரும் பரிசீலித்தனர். கருணாநிதி சில திருத்தங்கள் செய்ததை அடுத்து பட்டியல் இறுதியாக்கப்பட்டுள்ளது. சில அமைச்சர்களுக்கு வாய்ப்பு இல்லை? அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலை கருணாநிதி வெளியிடுகிறார்.
வேட்பாளர் பட்டியலில் இப்போது அமைச்சராக உள்ள சிலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்பாகச் செயல்படாத எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த இடங்களில் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment