சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க., கூட்டணியில் பக்காவாக திட்டமிடப்பட்டு, தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, வி.சி., தலைவர் திருமாவளவன் என காங்கிரஸ் தவிர மற்ற கட்சி கூட்டணித் தலைவர்கள், "ரவுண்டு கட்டி' பிரசாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரசிலோ இப்பொழுது தான் தேர்தல் பணிக்குழுவே நியமிக்கப் பட்டுள்ளது. தி.மு.க., போட்டியிடும் 119 தொகுதிகளிலும், வாக்காளர்களுக்கு ராஜ உபச்சாரம் நடந்து வருகிறது. கணக்கு வழக்கின்றி, பணம் வாரி இறைக்கப்படுகிறது. வாக்காளர்கள் மட்டுமின்றி, தி.மு.க., தொண்டர்களும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் கவனிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகளால் எத்தனை வழக்குகள் வந்தாலும், அது ஒருபுறம் இருக்கட்டும் என ஒதுக்கிவிட்டு, தி.மு.க., நிர்வாகிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.காங்கிரஸ் போட்டியிடும் ஒரு சில தொகுதிகளைத் தவிர, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தி.மு.க.,வின், கொல்லை பக்கப் பிரசாரம் களை கட்டி வருகிறது.
அ.தி.மு.க., அணியில் அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் தலைவர்கள் தா.பாண்டியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்தின் பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. மக்கள் கூட்டம், பெரியளவில் வருகிறது. தலைவர்கள் இப்படி சூறாவளி சுற்றுப் பயணம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர்கள், தங்கள் கட்சியினரைக் கூடக் கவனிப்பதில்லை; கூட்டணிக் கட்சியினரை கண்டுகொள்வதேயில்லை. தே.மு.தி.க., - கம்யூனிஸ்ட்கள் உட்பட, கூட்டணிக் கட்சியினருடன் அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஒத்துப்போகாத நிலையே பல இடங்களில் நிலவுகிறது. அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க., கூட்டணித் தலைவர்கள் பிரசாரமாக செய்யுமளவுக்கு, விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் கூட்டணித் தலைவர்கள் இணைந்து ஒரு மேடையில் தோன்றி இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்
0 comments :
Post a Comment