இன்று நல்ல நாள் என்பதால், தமிழக முதல்வர் கருணாநிதி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டவர்களும், மற்ற வேட்பாளர்களும் இன்று மனு தாக்கல் செய்கின்றனர். அ.தி.மு.க., தலைமை ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, அனைத்து அ.தி.மு.க., வேட்பாளர்களும் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
மனு தாக்கலுக்கு, 26ம் தேதி கடைசி நாள். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றை வாபஸ் பெற, 30ம் தேதி கடைசி நாள். எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல், 30ம் தேதி வெளியாகிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும், 20 நாட்கள் இருந்தாலும், ஏப்ரல் 11ம் தேதி பிரசாரத்தை முடிக்க வேண்டும். எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின், பிரசாரத்துக்கு, 12 நாட்களே இருக்கும். அதற்குள் தலைவர்களது வருகை போன்ற வற்றில் கவனம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். எனவே, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்காக காத்திருக்காமல், இன்றே தீவிர பிரசாரத்தை துவக்க, வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு பிரசாரம் செய்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து, பிரசாரம் செய்வதற்கான அவகாசமும் குறைவாகவே உள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், நேற்றே தனது பிரசாரத்தை, திருவாரூரில் துவக்கிவிட்டார். இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, தஞ்சாவூர், திருச்சியில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்யவுள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று, வேட்புமனு தாக்கல் செய்யும் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையையும் வெளியிடவுள்ளார். தனது தொகுதியில் பிரசாரத்தைத் துவங்கும் அவர், தொடர்ந்து தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். தலைவர்களது பிரசாரம் மட்டுமன்றி, திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பிரசாரமும் இன்று முதல் துவங்குகிறது. முதல்வரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய அமைச்சர் அழகிரியும், துணை முதல்வர் ஸ்டாலினும் தான், தி.மு.க., கூட்டணி பிரசாரத்தை தோளில் சுமக்க உள்ளனர்.
காங்கிரசைப் பொறுத்தவரை, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் போன்றோர் பார்லிமென்ட் கூட்டத் தொடரிலும் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், விடுமுறை நாட்களில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். அ.தி.மு.க., அணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களாக விஜயகாந்த், தா.பாண்டியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட மனவருத்தங்களை சரிசெய்து, தொண்டர்களை தீவிர களப்பணியாற்ற வைக்க, இந்த ஒரே மேடை பிரசாரம் உதவும் என்று நிர்வாகிகள் நம்புகின்றனர்.
0 comments :
Post a Comment