சென்னை : அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி 40 சட்டப்பேரவை தொகுதிகளில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் கூறினார். அம்பாசமுத்திரம், சிவகாசி, கோவில்பட்டி உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் தான் போட்டியிட யோசித்து வருவதாகவும் கார்த்திக் கூறினார்.
அதிமுகவுடனான உறவு முறிந்துவிட்டது. சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சி 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டிருக்கிறோம். ஒருவேளை 40 தொகுதிகளில் போட்டியிட முடியாவிட்டால் 25 தொகுதிகளிலிருந்து 30 தொகுதிகளில் கட்டாயம் போட்டியிடுவோம்.
அதிமுகவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் காரணமாக கூட்டணி என்றாலே வெறுப்பாக இருக்கிறது. அதிகமுவிடம் நாங்கள் அதிகமான தொகுதிகளும் கேட்கவில்லை. மூன்றே மூன்று தொகுதிகள்தான் கேட்டோம். முதலில் இரண்டு தொகுதிகள் தருகிறேன் என்றார்கள். பிறகு அது ஒரு தொகுதியானது. இப்போது அதுவும் தரமுடியாது, ஆதரவு மட்டும் தெரிவியுங்கள் என்கிறார்கள். எங்கள் கட்சி பலத்தைப் பற்றி தவறாக எடை போடுகிறார்கள். அது தவறு என்பதை இந்தத் தேர்தலில் நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம். நாங்கள் போட்டியிடும் நாற்பது தொகுதிகளில் இளைஞர்களுக்கே அதிக வாய்ப்பு கொடுக்க உள்ளோம். அதைப்போல பெண்களுக்கும் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வாய்ப்பு கொடுப்போம்.
தேர்தலில் நான் நிற்பது குறித்து முடிவு செய்யவில்லை. எங்கள் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதால் நிற்கலாமா வேண்டாமா என்கிற யோசனை இருக்கிறது. இருப்பினும் அம்பாசமுத்திரம்,சிவகாசி, கோவில்பட்டி உள்பட ஐந்து தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பது குறித்து யோசித்து வருகிறேன். எங்களைப் போலவே மதிமுகவும் அதிமுகவால் பாதிக்கப்பட்டுள்ளது. மதிமுகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி நாங்கள் யோசிக்கவில்லை. அவர்களிடமிருந்து அழைப்பும் வரவில்லை. வருகிறபோது பரிசீலிப்போம் என்று அவர் கூறினார்.
0 comments :
Post a Comment