சமூக அமைப்பின் ஆரம்ப காலம் முதலே ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவோராகவும், பெண்கள் அடங்கிப் போகக்கூடிய பலவீனமானவர்களாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இந்த ஆணாதிக்க போக்கு காரணமாக குடும்ப மற்றும் சமூக அமைப்புகளில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் பெண்களையும், அவர்களது உரிமைகளையும் நிலைநாட்ட அவ்வப்போது பிரத்யேக சட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன.
வரதட்சணை தடைச் சட்டம் 1961, குடும்ப வன்முறை தடைச் சட்டம் 2005, பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்துதல் தடைச் சட்டம் 2007, ஈவ் டீசிங் தடை சட்டம், ஆபாச சித்தரிப்பு தடைச் சட்டம், பெண்களை துன்புறுத்துதல் தடைச் சட்டம் என கிரிமினல் குற்றம் சார்ந்த சட்டங்களும்; கார்டியன் சட்டம் 1890, மணமான பெண்கள் சொத்துரிமைச் சட்டம் 1959 என சிவில் உரிமை சட்டங்களும்; ஆனந்த் திருமண சட்டம் 1909, அந்நிய திருமணச் சட்டம் 1969, இந்து திருமணச் சட்டம் 1955, திருமணம் மற்றும் மனமுறிவு சட்டம் 1936 என, திருமண சட்டங்களும் பல்வேறு பட்டியல்களாக நீள்கின்றன. இப்படி, மாறி வரும் சமூகச் சூழல், அதனால் ஏற்படும் தாக்கங்களுக்கு தகுந்தாற்போல் எண்ணற்ற சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட போதிலும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் சங்கிலித் தொடராக நிகழ்கின்றன.
கடத்தல், மானபங்கம், கற்பழிப்பு, கொலை, பாலியல் ரீதியான துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போகின்றன. கோவை மாநகர எல்லைக்குள் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 15 கற்பழிப்புகள், 35 மானபங்க சம்பவங்கள், 10 ஆள் கடத்தல்கள், 45 துன்புறுத்தல்கள் நிகழ்ந்துள்ளன. இவை உட்பட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 161 வழக்குகள் போலீசில் பதிவாகியுள்ளன. இவற்றில், 9 வழக்குகள் விபசாரம் தொடர்பானவை.
விபசார வழக்குகள் தவிர மற்ற வழக்குகள் கோர்ட் மற்றும் போலீசாரின் விசாரணையில் உள்ளன.அதேபோன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக மேற்கு மண்டத்தில் கடந்த 2010ம் ஆண்டில் 143 கற்பழிப்புகள், 26 வரதட்சணை தற்கொலைகள், 402 மானபங்க சம்பவங்கள், 29 பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நிகழ்ந்துள்ளன. தவிர, கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் 259, கடத்தல் சம்பவங்கள் 410, தற்கொலைக்கு தூண்டல் சம்பவங்கள் 50 என்ற எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளன. கடந்த 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கற்பழிப்பு, வரதட்சணை சாவு, மானபங்கம், கணவன் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுதல், ஆள் கடத்தல் குற்றங்கள் அதிகரித்திருப்பது போலீஸ் ஆவண புள்ளி விபரங்களில் தெரியவருகிறது.
0 comments :
Post a Comment