பீஜிங்:எகிப்து, டுனீசியா, லிபியா எழுச்சியைத் தொடர்ந்து சீனாவிலும் மக்கள் அமைதியான முறையில் போராட வேண்டும் என்ற இணையதள அழைப்பை அடுத்து, சீனாவில் செய்தி சேகரிக்கும் வெளிநாட்டு நிருபர்களுக்கு, சில சலுகைகளை சீன அரசு ரத்து செய்துள்ளது.
லிபியா எழுச்சியைத் தொடர்ந்து, பிப்ரவரி 20ம் தேதி பீஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்றும், இந்த ஆர்ப்பாட்டம் ஒவ்வொரு ஞாயிறன்றும் நடக்க வேண்டும் என்றும், இணையதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் பீதியடைந்த சீன அரசு, பிப்ரவரி 20 மற்றும் 27ம் தேதிகளில் பீஜிங், ஷாங்காய் மற்றும் வேறு சில நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களை போலீசார் மூலம் கலைத்தது; பலர் கைது செய்யப்பட்டனர். இதில், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் சிலர், பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாயினர்.அவர்களின் கேமராக்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏ.பி., ப்ளூம்பெர்க் போன்ற பிரபல செய்திநிறுவனங்களின் செய்தியாளர்கள் தாக்கப்பட்டனர்.கடந்த 2008ல், பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கை முன்னிட்டு, வெளிநாட்டு செய்தியாளர்கள் சீனாவில் எங்கு வேண்டுமானாலும் செய்தி சேகரிக்கலாம் என்பது போன்ற சில சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தன.
கடந்த வாரம் வரை இந்த சலுகைகள் அமலில் இருந்தன. மத்திய கிழக்கு நாடுகளில் நடப்பதைப் போல சீனாவிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தால், அவை வெளிநாட்டுப் பத்திரிகைகள் மூலம் உலகுக்குத் தெரியவரும் என்று பீதியடைந்துள்ள சீன அரசு, நேற்று அந்த சலுகைகளை உடனடியாக ரத்து செய்து விட்டது.இதனால், வெளிநாட்டு செய்தியாளர்கள் இனி, அரசு அனுமதிக்கும் இடங்களில் மட்டும் செய்தி சேகரிக்க வேண்டும். இதற்கு பல்வேறு செய்தியாளர் கூட்டமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
1 comments :
thanks for sharing.
Post a Comment