பீட்ரூட் ஜூஸ் பருகினால், முதுமையிலும் சுறுசுறுப்புடன் வாழ முடியும் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை, நைட்ரேட் சத்து வெகுவாக குறைப்பதாக, ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிந்தது.
இதை அடிப்படையாகக் கொண்டு, நைட்ரேட் சத்து நிறைந்த பீட்ரூட் ஜூசை முதியவர்களுக்குக் கொடுத்து, பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில், வாரத்திற்கு ஆறு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தியவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி கேட்டி லான்ஸ்லி கூறியதாவது: முதியவர்கள் சிறிய வேலை செய்தாலும், அவர்கள் மிகுந்த சோர்வடைந்து விடுவர். இதற்கு முக்கிய காரணம், வயதாகும்போது அவர்களது உடலில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கிவிடும். இதனால், திசுக்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் உடல் சோர்வடைந்துவிடும். எனவே, ஆய்வில் கலந்துகொண்ட முதியவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை குறைப்பதற்காக, பீட்ரூட் ஜூஸ் கொடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் சத்து, அவர்களது ரத்த நாளத்தை விரிவடையச் செய்தது. ரத்த ஓட்டம் எளிமையாக நடந்ததால், திசுக்களுக்கு வழக்கமாக தேவைப்படும் ஆக்சிஜன் அளவு 12 சதவீதம் குறைந்தது. மேலும், பீட்ரூட் ஜூஸ் அருந்திய முதியவர்கள் உடற்பயிற்சி மற்றும் நடைபயற்சி மேற்கொண்டாலும், அவர்கள் சோர்வடையாமல், வழக்கத்தைவிட சுறுசுறுப்பாக இருந்தனர். இவ்வாறு கேட்டி லான்ஸ்லி கூறினார். ஆனால், பீட்ரூட் பற்றிய தனி ஆய்வுத் தகவல் இது என்பதால், எல்லாரும் இதை அப்படியே பின்பற்றுவதா என்பது குறித்து, டாக்டர்கள் கருத்தைக் கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
அசோக்.S
0 comments :
Post a Comment