வாஷிங்டன்,ஜன. 30: எகிப்து அரசுக்கெதிராக போராட்டம் நடத்திவரும் மக்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அந்நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
எகிப்து நாட்டு மக்களின் உரிமைகளுக்காக பாடுபடுவோம் எனவும் தேசத்தின் சிறந்ததொரு எதிர்காலத்திற்காக அரசுடன் இணந்து செயல்படுவோம் எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோர் மீதான நடவடிக்கையை கைவிடுமாறு ஒபாமா முபாரக்குடன் நடத்திய அரை மணிநேர தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.
உலகில் இதர நாட்டு மக்களைப்போல் அமைதியாக ஒன்றுகூடவும், சுதந்திரமாக கருத்துக்களை கூறவும் தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கவும் எகிப்து நாட்டு மக்களுக்கு உரிமை உண்டு. எங்கேயும் இத்தகைய உரிமைகளுக்காக அமெரிக்கா பாடுபடும் என ஒபாமா தெரிவித்துள்ளார்.
போராட்டத்தைத் தொடர்ந்து தடைச் செய்யப்பட்ட இணையதளம், தொலைபேசி தொடர்புகளை மீண்டும் செயல்படவைக்குமாறு ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.
மேற்காசியா விவகாரங்களில் என்றைக்குமே அமெரிக்காவுடன் ஒத்துழைத்த முபாரக்கை நெருக்கடியான காலக்கட்டங்களில் அமெரிக்கா கைகழுவுகிறது என்பதைத்தான் ஒபாமாவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தேஜஸ்.
0 comments :
Post a Comment