உத்தப்புரத்தில் இரு பிரிவினர்களுக்கும் இடையே அரச மர வழிபாடு, நிழற்குடை அமைத்தல் போன்ற பிரச்னைகளால் பல ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது. உத்தப்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒரு பிரிவினருக்கு சொந்தமான மாரியம்மன்- சத்திய முத்தாலம்மன் கோயில் உள்ளது. இரு பிரிவினரின் மோதலால் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடக்கவில்லை. நேற்று இக்கோயிலுக்குள் ஒரு பிரிவினருடன் நுழையப் போவதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் அறிவித்து இருந்தனர். இதனால் உத்தப்புரம், எழுமலை பகுதிகளில் பதட்டம் நிலவியது.
பேரையூர் தாசில்தார் வரும் 12 ம் தேதி வரை உத்தப்புரத்தில் 144 தடையுத்தரவு பிறப்பித்தார். விருதுநகர், மதுரை எஸ்.பி.,க்கள் பிரபாகரன், மனோகர், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் 1,500 பேர் பல இடங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உத்தப்புரம் வருவதற்குரிய 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுரை டி.ஐ.ஜி., சந்தீப் மிட்டல் உத்தப்புரம் வந்து பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சங்கர், பேரையூர் தாசில்தார் மங்கள ராமசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு இருந்தனர்.
நுழைய முயற்சி: நேற்று காலையில் இருந்து உத்தப்புரத்தில் பதட்டம் அதிகரித்தது. உசிலம்பட்டியில் இருந்து எழுமலை வரும் அனைத்து பஸ்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. எழுமலை, உத்தப்புரத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. வேலைக்கு செல்பவர்கள் நடந்து சென்றனர். திடீரென்று காலை 10.45 மணிக்கு தெற்குத் தெருவில் பெரம்பலூர் எம்.எல்.ஏ., மகேந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொன்னுத்தாய் உட்பட 300க்கு மேற்பட்டவர்கள் பொங்கல் பானை, மாலைகள், வழிபாட்டு பொருள்கள் ஆகியவற்றோடு ஆலயப் பிரவேசம் செய்ய முயன்றனர். உடனே அந்த தெருவிலேயே போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். கோயிலுக்கு நுழையக் கூடாது என போலீசார் கூறியதால் போலீசாருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் நடந்தது. பின்னர் சாமுவேல்ராஜ், மகேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறிது நேரம் போராட்டம் குறித்து பேசினர். பின்னர் எம்.எல்.ஏ., உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் இரண்டு நாள் பதட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
315 பேர் மதுரையில் கைது: மதுரையில் தடையை மீறி, உத்தப்புரம் புறப்பட்ட மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், நன்மாறன் எம்.எல்.ஏ.,, நகர் செயலாளர் அண்ணாதுரை உட்பட 315 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று மார்க்சிஸ்ட், கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆலயப்பிரவேசம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நேற்று கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் காமராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் கட்சி அலுவலகத்திலிருந்து மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சம்பத் தலைமையில் உத்தப்புரத்திற்கு புறப்பட்டனர். அவர்களை தடுத்த போலீஸ் துணை கமிஷனர் சின்னசாமி, உதவிகமிஷனர் கணேசன், "நகருக்குள் போலீஸ் அனுமதியின்றி ஊர்வலமாக செல்லக்கூடாது' என்றனர். இதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகள், அருகில் உள்ள ஜின்னா திடலுக்கு ஊர்வலமாக வந்து, போலீசாருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 53 பெண்கள் உட்பட 315 பேர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment