வேதாரண்யம், ஜன. 23: நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். வேதாரண்யம் பகுதி மீனவர் ஜெயக்குமாரின் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு இழுத்துக் கொன்றிருக்கின்றனர். பின்னர், படகில் பிரேதத்தை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
கடலில் குதித்து நீந்திக் கொண்டிருந்த ராஜேந்திரனும், செந்திலும் ஜெயக்குமாரின் சடலத்துடன் கரை திரும்பி உள்ளனர். ஜெயக்குமாரைக் கொன்ற இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான கொடுஞ் செயலுக்கும், கடிதம் எழுதுதல், தந்தி அடித்தல் போன்ற கபட நாடகங்களை நடத்தியே, தமிழக மீனவர்கள் அன்றாடம் கொல்லப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது என்பது தொடர் கதையாக ஆகிவிட்டது. இலங்கை அரசை இந்திய அரசு கடுமையாக எச்சரிக்காததே இது போன்ற அவல நிலைமைக்கு காரணம். இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் இலங்கை கடற்படையினரால் இனி நடத்தப்பட்டால் இலங்கை அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற வகையில் மத்திய அரசின் நடவடிக்கை அமைய வேண்டும்.
0 comments :
Post a Comment