சர்வதேச அளவில், வாகனங்கள் விற்பனையில் இந்தியா பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. கார்கள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், வர்த்தக வாகன விற்பனையில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தையும் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் கார்கள் விற்பனையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் தான் முன்னணியில் இருந்து வந்தன.
வாகன உற்பத்தியில் கடந்த 2000ம் ஆண்டில் இந்தியா 15வது இடத்தில் இருந்தது. அதாவது மொத்த வாகன உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 1.4 சதவீதம் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலைமை தலைகீழாக மாறி விட்டது. மற்ற நாடுகளை விட வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் சீனாவும், இந்தியாவும் பெரும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இது கடந்த 2010ம் ஆண்டில் நன்கு தெரிய வந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையான,
வாகன உற்பத்தி மற்றும் விற்பனை விவரம் தெரிய வந்துள்ளது. கார்கள் விற்பனை இந்தியாவில் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், 39 சதவீதத்துடன் சீனா தான் முதலிடத்தில் உள்ளது. 10 சதவீதத்துடன் ஜப்பான், 9 சதவீதத்துடன் பிரேஸில், 5 சதவீதத்துடன் அமெரிக்கா, 3 சதவீதத்துடன் பிரிட்டன் ஆகிய நாடுகள் பின்தங்கிய நிலையில் தான் உள்ளன. சர்வதேச அளவில் மொத்த வாகன உற்பத்தில் இந்தியாவின் பங்களிப்பு 5 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
கார்கள் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், வர்த்தக வாகன விற்பனையில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. 2010ம் ஆண்டின் ஜனவரி நவம்பர் காலகட்டத்தில், 47 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 41 சதவீதத்துடன் சீனா இரண்டாவது இடத்தை தான் பிடித்துள்ளது. எனினும், வட்டி வீதம் அதிகரிப்பு, உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணங்களால், இந்தியாவில் வாகன உற்பத்தி அதிகரிப்பில் பெரும் முட்டுக்கட்டை காணப்படுகிறது. இல்லாவிடில், கார் விற்பனையில் இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கும் என்றே கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment