சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி பிளஸ் 2 மாணவியிடம் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட புதுமுக டைரக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை தி.நகர் அபிபுல்லா ரோட்டில் ஜீனியஸ் பிலிம்ஸ் சிட்டி என்ற பெயரில் தனியார் திரைப்பட கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் உரிமையாளர் பெயர் அரவிந்த் ஜி மேத்தா. இவர் சொந்த தயாரிப்பாக நிலவே வருக என்ற பெயரில் புதுப்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். இதற்காக புதுமுக நடிகர் - நடிகைகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். விளம்பரத்தை பார்த்து ஏராளமானோர் சினிமா ஆசையில் அரவிந்த்தை சந்தித்தனர். அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக போலீசுக்கு புகார் வந்தது. போலீசார் அரவிந்தை அழைத்து விசாரித்ததில், படம் இறுதிகட்டத்தை எட்டி விட்டதாகவும், விரைவில் ரீலிஸ் செய்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி விட்டனர்.
இந்நிலையில் ஊட்டியை சேர்ந்த ராணுவ பெண் அதிகாரி ரீட்டா என்பவர் தேனாம்பேட்டை போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், டைரக்டர் அரவிந்த் பத்திரிகைகளில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து, பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த எனது மகள் ஜெனீபரை சினிமாவில் நடிக்க வைக்க முடிவு செய்தேன். அரவிந்த்தை பார்த்து பேசியபோது, `அவர், எனது மகளை அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக சொன்னார். இதற்காக ரூ.நான்கரை லட்சம் பணமும் கொடுத்தேன். சினிமா படப்பிடிப்பும் நடந்தது. எனது மகளும் கலந்துகொண்டு நடித்தாள். ஆனால் திடீரென்று படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. டைரக்டர் அரவிந்த்தின் அலுவலகமும் பூட்டி கிடக்கிறது. இதனால் எனது மகளின் படிப்பு வீணானதோடு, என்னுடைய பணமும் பறிபோய்விட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
இதையடுத்து டைரக்டர் அரவிந்தை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
எனது சொந்த ஊர் மணப்பாறை. நான் திரைப்பட கல்லூரி நடத்தி வருகிறேன். எனது திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயிற்சி, டைரக்ட் பயிற்சி, இசை பயிற்சி, எடிட்டிங் பயிற்சி போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தேன். 6 மாத பயிற்சிக்கு ரூ.5 ஆயிரமும், ஒரு வருட பயிற்சிக்கு ரூ.9 ஆயிரமும் மாணவ-மாணவிகளிடம் கட்டணம் வசூலித்து வந்தேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவ - மாணவிகளை வைத்து `நிலவே வருக' என்ற பெயரில் சொந்தமாக படம் தயாரித்தேன். அதன் டைரக்டரும் நான்தான். போதைப்பொருளுக்கு அடிமையான ஒரு மாணவி படும் கஷ்டங்களை பின்னணியாக வைத்து இந்த படத்தை எடுத்தேன். ஜெனீபர்தான் கதாநாயகியாக நடித்தார். படம் நன்றாக வளர்ந்தது. கிட்டத்தட்ட படம் முழுக்க எடுத்துவிட்டேன். 4 நாள் சூட்டிங் மட்டுமே பாக்கி இருந்தது. ஏற்கனவே ரூ.14 லட்சம் செலவு செய்துவிட்டேன். மேலும் ரூ.10 லட்சம் தேவைப்பட்டது. அந்த பணத்தை என்னால் புரட்டமுடியவில்லை. அதனால்தான் படத்தை முழுமையாக எடுத்து வெளியிடவும் முடியவில்லை. யாரிடமாவது பைனான்ஸ் வாங்கி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து வந்தேன். ஆனால் அதற்குள் ஜெனீபரின் தாயார் போலீசில் புகார் கொடுத்துவிட்டார். அரவிந்த் மீது போலீசார் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
பிளஸ்2 மாணவி தவிர, 83 வயது மூதாட்டியையும் பாட்டி வேடத்தி்ல் நடிக்க வைப்பதாக கூறி அரவிந்த் ஏமாற்றியிருக்கிறாராம். இதேபோல சினிமா கனவுகளாலும், ஆசையாலும் ஏராளமான அப்பாவி இளைஞர்கள் அரவிந்திடம் பணத்தை இழந்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் சினிமா ஆசை காட்டி ஏராளமாவர்களை ஏமாற்றியவர் குற்றவாளியா? அல்லது சினிமாக்காரர்களின் உண்மை முகம் தெரியாமல் சினிமா மோகத்தால் பணத்தை அள்ளிக் கொடுத்த அப்பாவிகள் குற்றவாளிகளா? சினிமா ஆசையால் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு சீரழிந்திருக்கும் அந்த பிளஸ்2 மாணவி குற்றவாளியா?
2 comments :
nalla pathivu
எல்லாம் காலத்தின் கொடுமை
Post a Comment