அரசியலில் கிரிமினல்கள் பங்கேற்பது அதிகரித்து வருகிறது. தேர்தல் முறையில் இது மோசமான ஒன்று. ஜனநாயகத்தில் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், தேர்தலின் தரத்தை மேம்படுத்தவும் அரசியல் கிரிமினல் மயமாகும் பிரச்னை குறித்து, பார்லிமென்டும், அரசும் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
கொலை, கற்பழிப்பு மற்றும் பணம் பறித்தல் போன்ற மோசமான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டோர், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.மேலும், மோசமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அதில் தண்டிக்கப்பட்ட எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களையும் உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பொது நலன் கருதி இந்தத் தடையை விதிக்க வேண்டியது அவசியம்.
தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, ஒருவர் கோர்ட்டால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் மட்டுமே, அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார். ஒருவருக்கு எதிராக வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் போது, அவர் சிறையில் இருந்தால் கூட தேர்தலில் போட்டியிடலாம். ஓட்டு போட தகுதியில்லை என்றாலும், தேர்தலில் போட்டியிட அவருக்கு தகுதியுண்டு.கொலை, கற்பழிப்பு, பணம் பறித்தல் போன்ற மோசமான கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டோரை,
அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு மேலான தண்டனை பெறக்கூடிய குற்றங்களைச் செய்தோரை, அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.இதை செய்யும்படி, மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. மேலும், தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்னதாக, இப்படிப்பட்ட குற்ற வழக்குகளைச் சந்தித்தோருக்கு தடை விதிக்கலாம் என்றும்தெரிவித்தது.
எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., பதவியில் இருக்கும் போது, சிலர் தாங்கள் செய்த குற்றங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றும், பதவியில் தொடர்கின்றனர்; அந்தப் பதவிக்குரிய சலுகைகளையும் அனுபவிக்கின்றனர். அவர்களை யாரும் தகுதி நீக்கம் செய்வதில்லை.அதே நேரத்தில், சாதாரண நபர் ஒருவர் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு விட்டால், அவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவதில்லை. இது பாரபட்சமான நடவடிக்கை. இதையெல்லாம் சரி செய்ய வேண்டும்.எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., பதவியில் இருப்போர், கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு விட்டால், அவர்கள் தற்போதைய சபையில் மட்டுமே பதவியில் தொடர முடியும். அப்பீல் மனு நிலுவையில் இருந்தாலும், எதிர் காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது வரவேற்கத்தக்கது.
கடந்த லோக்சபாவில் இடம் பெற்ற எம்.பி.,க்களில், கிரிமினல் வழக்குகளில் சிக்கியோர் 128 பேர். இவர்களில் 58 பேர், மோசமான குற்றச்சாட்டுகளை சந்தித்தவர்கள். கிரிமினல் வழக்குகளை சந்திக்கும் எம்.பி., க்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது கவலை தரும் அம்சம்.பீகார் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், வெற்றி பெற்ற 243 எம்.எல்.ஏ.,க்களில், 141 பேர் (59 சதவீதம்) கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள். இவர்களில் 85 பேர், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர்கள். கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய யாரையும், வரும் 2014 சட்டசபை தேர்தலில் நிறுத்த மாட்டோம் என பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது ஒரு நல்ல முன்னு தாரணம். அனைத்து கட்சிகளும் இதை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு குரேஷி கூறினார்.
0 comments :
Post a Comment