அமெரிக்க கல்வியின் முக்கிய அம்சமே, அந்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கு இருக்கும் சுயாட்சி உரிமைதான்.
அங்குள்ள கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் எந்த தனிப்பட்ட அமைச்சகத்தின் கீழும் வருவதில்லை.
ஒவ்வொரு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகமும், தனக்கென தனி பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள்(உள்நாடு மற்றும் வெளிநாட்டு மாணவர்) ஆகியவற்றை கொண்டுள்ளன. மாணவர்களை சேர்ப்பதில் சில கல்வி நிறுவனங்கள் கடுமையான விதிமுறைகளையும், சில கல்வி நிறுவனங்கள் இலகுவான விதிமுறைகளையும் கொண்டுள்ளன.
அமெரிக்க கல்வியின் மற்றொரு முக்கிய அம்சம் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம்(தரச்சான்று பெறுதல்) ஆகும். அரசை சாராத தனியார் அங்கீகரிப்பு ஏஜென்சிகள் இப்பணியில் ஈடுபடுகின்றன. இந்த ஏஜென்சிகள் அங்கீகரிப்புக்கென்று பல விதிமுறைகளை வகுத்துள்ளன. அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களை மதிப்பிடுவதற்கு இருக்கும் ஒரே முக்கிய அம்சம் இந்த அங்கீகாரமாகும். இந்த அங்கீகாரத்தை பெற்ற கல்வி நிறுவனங்கள், தங்கள் மாணவர்களை பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடியும். எனவே அமெரிக்காவில் படிக்க விரும்புபவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களையே தேர்ந்தெடுக்கவும். இந்திய அரசும் தரச்சான்று பெற்ற அமெரிக்க கல்வி நிறுவனங்களையே அங்கீகரிக்கிறது.
அமெரிக்காவின் கல்விமுறை அதிகம் நடைமுறை சார்ந்தது. பகுப்பாய்வு மற்றும் மையக் கருத்துக்களை புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவேதான் ஆராய்ச்சிகள் மற்றும் புராஜக்டுகள் போன்றவை அமெரிக்க கல்வியின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இதனால் ஒரு படிப்பின் கால அளவிற்கு பெரியளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு இளநிலை படிப்பு 4 ஆண்டுகள் கால அளவு உடையது. ஆனால் அந்த படிப்பை முடிக்க 3 வருடங்களும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது 5 வருடங்களும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வருடமானது 2 செமஸ்டர் கொண்டதாகவோ அல்லது 3 செமஸ்டர் கொண்டதாகவோ பிரிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் வைக்கப்படும் தேர்வுகளின் மூலம், தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யும் முறை இங்குள்ளது.
0 comments :
Post a Comment