புது தில்லி ,ஜன .10: அமெரிக்கா உள்பட 8 நாடுகளில் விரைவில் வருமான வரி அலுவலகங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா ஏற்கெனவே சிங்கப்பூர், மோரீஷஸ் ஆகிய இரு நாடுகளில் வருமான வரி மையங்களை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், நெதர்லாந்து, சைப்ரஸ், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 நாடுகளில் வருமான வரி மையங்களை நிறுவத் திட்டமிட்டு அதற்கான பணியை முடுக்கிவிட்டுள்ளது.
இன்னும் இரு மாதங்களுக்குள் இந்த அலுவலகங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அந்த அலுவலகங்களுக்கு மூத்த வருமான வரி அதிகாரிகளை நியமித்தல் உள்ளிட்ட பணியை விரைந்து செய்யுமாறு மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தை (சிபிடிடி) மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். தாராளமயமாக்கலுக்குப் பிறகு உலகப் பொருளாதாரம் ஒரு குடையின் கீழ் வந்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கொண்டுவரப்படும் வர்த்தகம் சார்ந்த சட்டங்கள், விதிமுறைகள் குறித்து அனைத்து நாடுகளும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்தியா உள்பட ஒவ்வொரு நாடும் தங்களுக்கு வர்த்தகத் தொடர்புடைய பிற நாடுகளில் வருமான வரி அலுவலகங்களை தொடங்கி வருகிறது.
இப்போது பிற நாடுகளில் இந்தியா ஏற்படுத்தவுள்ள வருமான வரி அலுவலகங்கள் வரி சார்ந்த முக்கியமான பணிகளை மேற்கொள்ளவுள்ளன. இந்தியாவில் நடைபெறும் முக்கியமான வருமான வரி ஏய்ப்பு வழக்குகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதை அறிந்து தகவலைத் திரட்டுதல், சர்வதேச வரிச் சட்ட உடன்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு வழிகாட்டுதல், வெளிநாடுகளில் இந்தியர்கள் செய்யும் முதலீடு தொடர்பான தகவலை பெறுதல், இந்திய வருமான வரி குறித்த சட்ட திட்டங்கள் குறித்து வெளிநாட்டவர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்தியாவில் முதலீடு செய்ய ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை செய்யும்.
0 comments :
Post a Comment