இசையால் உலக திரையுலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். அவர் இசையில் மயங்காதார் எவரும் இல்லை. திரைக்கலைஞர்களின் லட்சிய கனவான ஆஸ்கார் விருதை 2009-ல் ஏ.ஆர்.ரகுமான் பெற்றுக் கொண்டு எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் கூறிய வார்த்தைகளை கேட்டு தமிழ் கூறும் நல்லுலகம் அவரை உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்ந்தது.
தமிழ் மன்னர் புகழை பழித்து கல் சுமந்த கசடர்களான கனசவிசயர் வழித் தோன்றலாய் இப்போது ஒரு இஸ்மாயில் தர்பார் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். இவர் ஏ.ஆர்.ரகுமானை பழித்து விளம்பரம் தேடியுள்ளார். அதாவது, “ஜெய்ஹோ” பாடல் ரகுமானுக்கு உரியதில்லை என்றும் காசு கொடுத்து ஆஸ்கார் விருதை வாங்கியுள்ளார் என்றும் அவர் வசை பாடியுள்ளார். ஏ,ஆர்.ரகுமான் இசை தனித்துவம் வாய்ந்தது. நவீன தன்மைகளை உள்ளடக்கியது.
மேட்டுக்குடி இசையோடு பள்ளத்தில் தள்ளப்பட்டு கிடக்கும் தலித் மக்களின் பறையையும் இணைத்து தரும் சிறப்புடையது. “சினேகிதியே”, “அழகிய லைலா”, பாடல்கள் நவீன தன்மையில் மிளிர்வன. “சின்ன சின்ன ஆசையாக மிளிந்து மானூத்து சந்தையிலே என வளர்ந்து கண்ணா மூச்சி ஏனடா என வியக்க வைத்து “டாக்சி டாக்சி” என இளைஞர்கள் இதயங்களை சுண்டி இழுத்தது.
அவர் இசையை பருகி உலகமே ஆனந்த கூத்தாடுகிறது. ஏ.ஆர்.ரகுமானை விமர்ச்சிக்க இஸ்மாயில் தர்பாருக்கு அருகதை இல்லை. ஆஸ்கார் விருதை பற்றி அவதூறு கூறியதன் மூலம் இப்படியும் அனாமதேய பேர் வழிகள் விளம்பரம் பெற்று விடுகிறார்கள். ஆனால் வித்தக கலைஞர் ஏ.ஆர்.ரகுமான் புகழுக்கு எள்ளவு கூட களங்கம் கற்பித்து விட முடியாது. ஆஸ்கார் விருது குழுவின் 30 உறுப்பினர்களையும் காசு கொடுத்து விலைக்கு வாங்குவது என்பது இஸ்மாயில் தர்பாரின் கற்பனையில் மட்டுமே சாத்தியம்.
0 comments :
Post a Comment