பெல்ஜியம் நாட்டில், ஐரோப்பிய யூனியன் கவுன்சில் கூட்டத்தில், ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்னை குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: இலங்கை அரசு, ஏழு வல்லரசுகளின் ராணுவ உதவியுடன், தமிழ் மக்களை கொன்று குவித்தது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், போரை நிறுத்தும்படி கூறியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.
2009ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, மே மாதம் வரை லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஜெர்மனி தீர்மானம் கொண்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரித்தன. இலங்கைக்கு பொருளாதார உதவி செய்யக்கோரி, இலங்கை அரசு தயார் செய்த தீர்மானத்தை, இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட 29 நாடுகள் ஆதரித்தன. அதை ரத்து செய்யும்படி, தற்போது ஐ.நா., மூவர் குழு பரிந்துரைத்துள்ளது.
ராஜபக்ஷேவையும், அவரது சகோதரர்களையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகியவை தனி நாடாக ஓட்டெடுப்பு நடத்திய ஐ.நா., மன்றம், தமிழ் ஈழம் சுதந்திர தேசமாக, அனைத்து நாடுகளின் பார்வையாளர்களுடைய கண்காணிப்பில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களும், அந்தந்த நாடுகளில் பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றிய பார்லிமென்டை கேட்டுக் கொள்வதெல்லாம், இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம், காவல் துறை உடனே அகற்றப்பட வேண்டும். சிங்களர் குடியேற்றங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வீடுகளை இழந்து முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு, மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள, செஞ்சிலுவை சங்கம், தொண்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். சிங்கள ராணுவத்தாலும், போலீசாராலும் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் உடனே விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.
0 comments :
Post a Comment