இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும்.
15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.
பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால் இல்லை. பெரும்பாலான துறைகள் ஆண்களால் நடத்தப்படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் உள்ளவர்களால் பலவகை பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ""பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''. இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை.
இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும். இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது.
அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.
இச்சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பாகும். பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.
பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இச்சட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கூடிய விரைவில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், கண்டிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
1 comments :
பனி இடங்களிலா ?
எந்தப் பனி - ஐஸ்லாந்தா ? கிரீன்லாந்தா ? கனடாவா ?
அது பனி அல்ல பணி .. மாற்றினால் தமிழ் தழைக்கும் ...
:)
Post a Comment