குர்கான் : அரியானா மாநிலம், குர்கான் மாவட்டத்தில், ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்குமாறு, போலீசார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். சர்வதேச அளவில், இது மிக அதிகபட்ச எண்ணிக்கை. சாலை விபத்துகளை குறைக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்துகளில் உயிரிழக்கின்றனர். எனவே, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று, பல்வேறு மாநிலங்களில் சட்டமியற்றப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணிவது தொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
ஆனாலும், ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கவே செய்கின்றனர். அரியானா மாநிலம், குர்கான் மாவட்டத்தில், இருசக்கர வாகன ஓட்டிகளில், ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் வழங்க வேண்டும் என்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
குர்கான் மாவட்டத்தில் ஆண்டுதோறும், ஆயிரத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் நடக்கின்றன. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 951 பேர் படுகாயமடைந்தனர். இதில், 461 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள். ஹெல்மெட்டை கட்டாயமாக அணியுமாறு போலீசார் அறிவுறுத்தினாலும், பொதுமக்கள் அதை கடைபிடிப்பதில்லை. எனவே, குர்கான் மாவட்டத்தில், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
0 comments :
Post a Comment