2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படும் டி.பி.ரியாலிட்டி நிறுவனம், அதற்குப் பிரதிபலனாக தனது துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி வழங்கியதாக சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்களது மனுக்களை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து இருவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், தில்லி உயர் நீதிமன்றமும் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று சிபிஐ தரப்பில் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கனிமொழியும், சரத்குமாரும் முக்கிய சதியாளர்கள். அவர்களை விடுவித்தால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள், எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சிபிஐ மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் டி.வி.க்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.214 கோடி ஊழல் பணம்தான், இருவரும் கூறுவதுபோல் கடன்தொகை அல்ல என்றும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. சிறப்பு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஜாமீன் மனுக்களை தீவிரமாகப் பரிசீலித்து தள்ளுபடி செய்து விட்டன. 2ஜி வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்குவது முறையாக இருக்காது என்று சிபிஐ தனது மனுவில் மேலும் கூறியுள்ளது. இந்தப் பின்னணியில் கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.
0 comments :
Post a Comment