ஜன. 5: வெளிநாடு வாழ் இந்தியரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் காலதாமதமாகும் என்று தெரிகிறது.வாக்குரிமை கோரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரில் வந்து தங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளதே இதற்கு காரணம்.பல லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.
இவர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.இதில் என்ன மாதிரியான நடைமுறைகளைப் பின்பற்றுவது என்பது தொடர்பாக அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையே மாறுபட்ட கருத்து உள்ளது. வாக்காளராக பதிவு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
அரசு தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல சுற்று பேச்சு நடத்தியாகிவிட்டது. வெளிநாடு இந்தியர்கள் நேரில் வருவது சாத்தியமில்லாதது என்பதை எடுத்துச் சொல்லியாகிவிட்டது. ஆனாலும் தேர்தல் ஆணையம் பிடிவாதமாக உள்ளது என்று வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் மட்டும் 15 லட்சம் இந்தியர்கள் உள்ளனர் என்றார் அவர்.வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க உரிய விதிகளை வகுப்பது தேர்தல் ஆணையத்தின் பணிதான் இருந்தாலும் நடைமுறை சாத்தியமானதாக இருக்க வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்திய நலத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறினார்.இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு அடுத்த மக்களவைத் தேர்தலில் வாக்குரிமை அளிக்கலாம் என்று பிரதமர் தெரிவித்திருந்தார். அதாவது வேறு நாட்டில் குடியுரிமை பெறாத, வேலை நிமித்தமாகவோ கல்விக்காகவோ வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கு இந்த வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.
1 comments :
usefull
Post a Comment