சென்னை: குழந்தைகளுக்கு தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், கடந்த 5 ஆண்டுகளில், கணிசமாகக் குறைந்துள்ளது. ஐ.நா., துணை அமைப்பான, "யுனிசெப்,' கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், 40 சதவீத பெண்களே, 6 மாதங்கள் வரை, தாய்ப் பால் கொடுக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
ஆறு மாதங்கள் வரை, துணை உணவு இல்லாமல், தாய்ப் பால் மட்டுமே கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை, 20 சதவீதம் தான் என்பதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. "பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப் பால் சிறந்த மருந்து; தாய்ப் பால் கொடுப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அறிவுத் திறன் மேம்படுகிறது. இதனால், பிறந்த ஒரு மணி நேரத்துக்குள், தாய்ப் பால் கொடுப்பதால் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம், 20 சதவீதம் வரை குறைகிறது' என, பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, தாய்ப் பால் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை, பெண்களிடம், குறிப்பாகக் கர்ப்பிணி பெண்களிடம் வலியுறுத்த, ஆகஸ்ட் முதல் வாரத்தை, தாய்ப் பால் வாரமாக கொண்டாட, ஐ.நா., சபை வேண்டுகோள் விடுத்தது. அன்று முதல், ஒவ்வொரு ஆண்டும், இந்தியா உள்ளிட்ட, 120 நாடுகளில், ஆகஸ்ட் முதல் வாரம், தாய்ப் பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. தாய்ப் பால் கொடுக்க வலியுறுத்தி, இந்த வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் பயனாக, தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், படிப்படியாக அதிகரித்தது. 1998ம் ஆண்டில் 50 சதவீதமாகவும், 2005ல் 55 சதவீதமாகவும் உயர்ந்தது. ஆனால், கடந்த ஆண்டு, "யுனிசெப்' நடத்திய ஆய்வில், தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம், 40 சதவீதமாகக் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயச்சந்திரன், இது குறித்து கூறும்போது, வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, கூட்டுக் குடும்பம் குறைந்து, தனிக் குடும்பங்கள் பெருகி வருவது ஆகியவையே, தாய்ப் பால் கொடுக்கும் பழக்கம் குறைந்ததற்கு முக்கியக் காரணம்.,ஆறு மாதங்கள் வரை தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதால் தான், அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை, முதல்வர் ஜெயலலிதா 6 மாதமாக உயர்த்தியுள்ளார் என்றார்.
அரசு குழந்தைகள் மருத்துவமனை கூடுதல் பேராசிரியர் ரமா சந்திரமோகன் கூறியதாவது: பெரும்பாலான பெண்கள், முதல் 3 மாதங்களுக்கு, தாய்ப் பால் கொடுப்பதை நிறுத்துவது கிடையாது. ஆனால், பிறந்த வீட்டிலிருந்து கணவன் வீட்டுக்குச் சென்றதும் வீட்டு வேலைகள், கணவரை கவனிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால், தாய்ப் பால் கொடுக்க நேரம் குறைந்து விடுகிறது. தாய்ப் பால் கொடுப்பதற்கு மாமியார், கணவரின் ஆதரவு அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்கள், பல மணி நேரம் பால் கொடுக்காமல் இருப்பதால், பால் சுரப்பு குறைந்து விடும். இதனால் நாளடைவில் பால் கொடுப்பதும் நின்றுவிடும். அரசு ஊழியர்களைப் போன்று, தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், 6 மாதங்கள், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாது என, எந்தத் தாயும் நினைப்பதில்லை. ஆனால், அவர்களுக்கு சரியாக வழிகாட்டுவதில்லை. குழந்தை பிறந்த முதல், 3 நாள்கள் மிக முக்கியம். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில், பால் கொடுக்க வேண்டும். துவக்கத்தில் பால் அதிகம் சுரக்காது. இதனால், பல பெண்கள், குழந்தைக்குப் பால் போதாது என நினைத்து, புட்டிப் பாலை நாடுகின்றனர். துவக்கத்தில் பால் குறைவாக சுரந்தாலும் தொடர்ந்து கொடுக்கும்போது பால் சுரப்பது அதிகரிக்கும்.
0 comments :
Post a Comment