நியூயார்க் : ஐ.நா.தலைமை அலுவலகம் முன்பு பொங்கு தமிழ் எழுச்சி இயக்கம் சார்பில் தமிழர்கள் அணி திரண்டனர். அவர்கள் மத்தியில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் பேசியதாவது,
சிங்கள ஆதிக்கத்தின் பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கின்றோம். நீங்கள் நீதியின் பிடியிலிருந்து தப்ப முடியாது. அதுமட்டுமின்றி, ஆயிரம் ஆயிரமாய் எம் தமிழ் மக்களைக் கொன்றொழித்த குற்றவாளிகளுக்கும் நாங்கள் ஒன்றைக் கூற விழைக்கின்றோம்.
எம் உறவிகளை ஆயிரக்கணக்கில் நீங்கள் அழித்தாலும் தமிழீழம் பற்றிய எம்பற்றுறுதியினை உங்களால் என்றும் அழித்துவிட முடியாது. சிங்கள ஆட்சியாளர்கள் நீங்கள் எம் மாவீரர் துயிலும இல்லங்களையும், அவர் தம் கல்லறைகளையும் அழித்திருக்கிறீர்கள். ஆனால், தமிழினம் தொடர்ந்து பொங்கி எழுந்து நிற்கின்றது என்பதை இந்த பெரு நிகழ்வு காட்டுகின்றது.
எமது மக்களை சிங்கள இனவெறி பிடித்த ஓநாய்களிடம் விட்டு விட்டு வெளியேறாதீர்கள் என்று உருக்கமானதோர் வேண்டுகோளை 2006ல் ஐ.நா.விடம் விடுத்தோம். ஆனால், ஐ.நா.அதிகாரிகள் வெளியேறிவிட்டனர்.
அன்று முதல் சிங்களவர்களை மட்டும் கொண்டுள்ள இலங்கையின் ஆயுதப் படைகள் செய்த அட்டூழியங்களை நாம் ஒன்றன்பின் ஒன்றாக ஐ.நா.வுக்கு எடுத்துக்கூறி வந்துள்ளோம். வைத்தியசாலைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகியதை தெரிவித்தோம். பாதுகாப்பு வலையங்களும், தாக்கப்பட்ட சம்பவங்களையும் ஐ.நா.வின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
தமிழ் மக்களை ஆயிரம் ஆயிரமாய் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்ததையும், நாம் ஐ.நா.விற்கு எடுத்துக் கூறி வந்தோம். தமிழ் இனத்தை முற்றாகவோ அன்றி ஒரு பகுதியையோ அழித்து விடுவது தான், உண்மையில் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தவை இன அழிப்பு என்பதை தெளிவாக உலகுக்குக் கூறி வந்தோம்.
எனினும் எங்கள் அபயக்குரல், செவிடன் காதில் ஊதிய சங்காக, உலக நாடுகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி படைத்த நாடுகளின் செவிகளில், அதிலும் குறிப்பாக ஐ.நா.வின் செவிகளில் விழவில்லை. எது எவ்வாறாயினும் எமது நிலைப்பாட்டின் உண்மைத் தன்மை இறுதியாக ஐ.நா. பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையினால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.
@ நம் இன உறவுகளுக்காக ஒன்று திரள்வோம் நாம் ஒவ்வொருவரும்.
0 comments :
Post a Comment