சென்னை : பேஸ்புக் மூலம் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வதில் சென்னை மேயர் வேட்பாளர்களான சைதை துரைசாமியும், மா.சுப்பிரமணியும்! இணையத்தில் போட்டிபோடுகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிவிட்டரை தனது பிரசாரத்துக்கான களங்களுள் ஒன்றாக பயன்படுத்திக் கொண்டார், பராக் ஒபாமா..
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸும் பிஜேபியும் தத்தமது அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலமாகவும் பிரசாரத்தை மேற்கொண்டன.
அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே ஆன்லைனில் பிரசார யுத்தமே நடந்தது.
இப்போது முதல் முறையாக சமூக வலைத்தளத்தை தீவிரமாக நாடியிருக்கிறது, தமிழக அரசியல் சமூகம்!
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியும், திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியமும் பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை தங்கள் பிரசாரக் களமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஆன்லைன் சென்னைத் தமிழர்களையும், இளைஞர்களையும் வசீகரிப்பதில் இவ்விரு வேட்பாளர்களும் சிரத்தையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
ஃபேஸ்புக்கில் கணக்கைத் தொடங்குவதில் முந்திக் கொண்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமிக்கு இன்றைய நிலவரப்படி 4,500 நண்பர்கள் கடந்துவிட்டனர்.
அதேவேளையில், தற்போது 1,200 நண்பர்களைக் கொண்டுள்ள திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியம், இந்த எண்ணிக்கையை கூட்டுவதில் முனைப்புடன் இருக்கிறார்.
இவ்விருவரின் ஃபேஸ்புக் ‘wall’களிலும் இவர்களது ஆதரவாளர்களும் அவ்வப்போது ஆதரவு கருத்துகளையும், பிரசார வார்த்தைகளையும், வாழ்த்துகளையும் பதிந்துவிட்டுச் செல்கிறார்கள்.
சைதை துரைசாமி ஃபேஸ்புக்கில் நண்பர்கள் வட்டத்தை விரிவுபடுத்தியிருந்தாலும், மா.சுப்பிரமணியன் தனது நிலைத் தகவலை வெளியிட்டு, செயல்பாட்டில் முன்னிலை வகிக்கிறார்.
தற்போது பிரசாரம் மேற்கொண்டுள்ள இடம், அடுத்து செல்லவிருக்கிற இடம், பிரசாரத்தில் கிடைத்த வரவேற்பு… என அடிக்கடி மா.சுப்பிரமணியத்தின் ஃபேஸ்புக்கில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளில் சென்னை மேயராக செய்த சாதனைகளையும் எடுத்துவிட்டு கவனத்தை ஈர்க்கிறார் அவர்!
சைதை துரைசாமியின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பொருத்தவரையில், அவர் பதியும் தகவல்களை விட அவரிடம் நண்பர்களாக இணைந்த ஆதரவாளர்கள் வந்து இட்டுவிட்டுச் செல்லும் பகிர்வுகள் தான் மிகுதி. ஆனால், அவரது தன்னம்பிக்கை ஆன்லைன்வாசிகள் பலரையும் வியக்க வைத்திருக்கக் கூடும். ஏற்கெனவே வைத்திருந்த கணக்குடன், ‘சென்னை மேயர்’, ‘சென்னை மேயர் 2011′ எனப் பற்பல கணக்குகளில் புதுப்புது ஃபேஸ்புக் பக்கங்களில் புகுந்திருக்கிறார்!
0 comments :
Post a Comment