இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இசையமைப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் ஏக் திவானா தா. தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீ-மேக் ஆன இந்தப்படத்தை, கவுதம் மேனனே இந்தியிலும் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஹோசன்னா என்ற பாடலுக்கு சில கிறிஸ்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எந்த படமாக இருந்தாலும், அந்த படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கும் முன் பலமுறை ஆய்வு செய்து தான் இசையமைப்பேன். அதேபோல் தான் ஹோசன்னா பாடலுக்கும், இசையமைக்கும் முன் என்னுடைய கிறிஸ்தவ நண்பர்கள் சிலரிடம் ஆலோசனை கேட்டு, அதன்பின்னர் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். அதுமட்டுமல்ல இந்தியில் வெளிவருவதற்கு முன்பே தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் பல விருதுகளும் இந்தபாட்டுக்கு கிடைத்திருக்கிறது. அப்படி இருக்கையில் ஒருசிலர் இந்த பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஒருவேளை இப்பாடல் யார் மனதையும் புண்படும்படியாக அமைந்திருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனிடையே பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுக்கு நான் பாடல் வரிகள் எழுதியுள்ளேன். ஆனால் ரஹ்மானை போன்று ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை. யாரும் மனதையும் புண்படும்படியாக அவர் நடந்து கொள்ள மாட்டார். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment