தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்.
இந்தியா தனது 63வது குடியரசு தினத்தை இன்றைய தினம் கொண்டாடுகிறது. ஜனநாயகம் உண்மையில் செயல்பட்டுள்ளதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமூக ரீதியில் ஜாதி, மதங்களால் பிரித்தாளுகின்றன மதவாத கட்சிகள், பொருளாதார ரீதியில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு அதிகரித்தும் வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து வறுமை ஒழிப்புக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை அறிவித்தன.
ஆனால் இந்த திட்டங்கள் வெறும் காகித அறிவிப்புகளாகவே இருந்துள்ளன. இன்றும் உலகிலேயே அதிக ஏழை மக்களைக் கொண்ட நாடு இந்தியாதான்.
உண்மையான ஜனநாயகம் மலர்ந்திருக்குமானால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது.
மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அரசியல் தலைவர்கள் இந்த குடியரசு தின கொண்டாடத்தையே குண்டு துளைக்காத மேடைகளில் கொண்டாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்? நக்சல்பாரி இயக்கத்தினர் கையில் இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதி இன்னும் இருப்பது ஏன்? பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களையும், பஸ், ரயில் போன்ற போக்குவரத்து சாதனங்களையும் போலீசார் கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது ஏன்?
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து துறைகளிலும் ஊழல், ஊழல், ஊழல் என்று ஊழல்மயமாக உள்ளன., இவற்றையெல்லாம் உற்று நோக்குகிறபோது எந்த ஜனநாயகம் உண்மையான ஏழை, நடுத்தர மக்களுக்கு பயன்பட வேண்டுமோ, அவர்களுக்கு பயன்படாததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே சமூகப் பொருளாதார ரீதியில் சம வாய்ப்பு சமுதாயம் ஏற்படவும், ஜனநாயகம் காப்பாற்றப்படவும் இந்த குடியரசு தின விழாவில் உறுதி சூளுரை மேற்கொள்வோம். அனைத்து தரப்பினருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment