தேனி : முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால், தேனி மாவட்டத்தில், பூதாகரமாக வெடித்துள்ள போராட்டங்களை சமாளிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். எந்த அளவிற்கு, மக்கள் இந்த போராட்டங்களில் பங்கேற்க உள்ளனர் என்பது தொடர்பாக, உளவுத் துறையாலும் துல்லியமாக கணிக்க முடியவில்லை.
மேலும், போராட்டத்தில் பங்கேற்க வரும் கிராம மக்கள், திடீரென தங்கள் முடிவுகளை மாற்றுவதால், போலீசாருடன் தொடர்ந்து மோதும் நிலை ஏற்பட்டு வருகிறது. நேற்று, உத்தமபாளையம் மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், உத்தமபாளையத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெரிவித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்ததால், உண்ணாவிரதம் இருந்த இடத்தில் இருந்து, கம்பம் நோக்கி செல்ல முயற்சித்தனர். இந்த நடவடிக்கையை எதிர்பாராத போலீசார், இவர்களை கம்பத்திற்கு முன், இரண்டு இடங்களில், போலீஸ் வாகனங்களை நிறுத்தி தடுத்தனர். இந்த பகுதிகளில், மோதல் ஏற்படும் நிலை உருவானது.
சிறிது நேரத்தில், போலீசார் அவர்களை அனுமதித்தனர். இப்பகுதியில் இருந்து சென்றவர்கள், கம்பம் மெட்டுக்கு செல்ல வேண்டும் என முயற்சிக்க, அந்த பாதையும் அடைக்கப்பட்டது. இதையடுத்து, குமுளிக்கு செல்ல திட்டமிட்டனர். கூடலூர் லோயர் கேம்ப் பகுதிக்கு செல்வதற்குள், நான்கு இடங்களில் போலீசார் தடுத்தனர். போலீசார் வழி மறிக்கும் இடங்களில், பொதுமக்களும் தடுப்புகள், கற்கள் வைத்தும், கொடும்பாவி எரித்தும், டயர் மற்றும் குப்பைகளை போட்டு எரித்தும், போலீஸ் வாகனங்களை தடுத்தனர். போராட்டம் துவங்கிய நாளில் இருந்து, இரண்டு நாட்களில் பிரச்னை ஓய்ந்துவிடும் என, உளவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர். ஆனால், உண்மை நிலை நேர் மாறாக உள்ளது.
0 comments :
Post a Comment